
அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பு, காப்பீடு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு மசோதாக்கள் இன்று பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா இன்று(டிசம்பர் 17) லோக்சபாவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம் தனியார் நிறுவனங்கள் இனி அணுமின் நிலையங்களை உருவாக்கவும், இயக்கவும் உரிமம் பெறலாம். குறிப்பிட்ட அணுசக்தி நடவடிக்கைகளில் 49 சதவீதம் வரை நேரடி வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
இந்த மசோதா,இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறனை 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட்டாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக யுரேனியம் சுரங்கம், எரிபொருள் செறிவூட்டல் மற்றும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்வது போன்ற முக்கியப் பணிகள் தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
குறைந்த செலவில் அமைக்கக்கூடிய சிறிய அணு உலைகளில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க இந்த மசோதா முக்கியத்துவம் அளிக்கிறது.
காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு மசோதா நிறைவேற்றம்:சப்கா பீமா சப்கி ரக்ஷா எனப்படும் காப்பீட்டுச் சட்டத் திருத்த மசோதா, நேற்று(டிசம்பர் 16) லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து இன்று(டிசம்பர் 17) ராஜ்யசபாவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. இது இந்தியா காப்பீட்டுத் துறையில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் காப்பீட்டுப் பரவல் அதிகரிக்கும், பிரீமியங்களைக் குறைக்கும் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவறான வழிகளில் ஈட்டப்பட்ட லாபத்தைப் பறிமுதல் செய்து, பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களுக்கு வழங்க இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2047-ஆம் ஆண்டிற்குள் ‘அனைவருக்கும் காப்பீடு’ என்ற இலக்கை எட்டவும், சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும், காப்பீட்டுத் துறையில் போட்டியை அதிகரித்து அதன் மூலம் பாலிசிதாரர்களுக்குக் குறைந்த விலையில் சேவைகளை வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.