
”தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை ஆறு வார காலத்திற்குள் கண்டறிய வேண்டும்,” என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, ‘குமாரி மகா சபா’ என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த பள்ளிகளை தமிழகத்தில் திறக்க மாநில அரசுக்கு அனுமதி வழங்கி, 2017ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு, 2017 டிச., 11ல் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது.
பின்னர், பல ஆண்டுகள் இந்த வழக்கு விசாரிக்கப்படாமலேயே இருந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் விசாரணை நடக்கிறது.
நேற்றைய விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டதாவது:
மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் மாநில அரசுகளுக்கு கிடையாது. இத்தகைய திட்டங்கள் மூலம் தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயல்கிறது. நாங்கள் நேரடியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக, வேறு யாரையோ வைத்து மனு தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவு மூலம் ஹிந்தியை திணிக்க திட்டமிடுகின்றனர்.
ஏற்கனவே, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை எங்கள் மீது திணிக்க முயன்றனர். அதை நாங்கள் ஏற்கவில்லை என்பதற்காக நியாயமாக எங்களுக்கு வரவேண்டிய மத்திய கல்வி நிதியை நிறுத்தினர். முதலில் இதை எல்லாம் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தயவுசெய்து மொழி சார்ந்த பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வராதீர்கள். தமிழக மாணவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள். தமிழகம் நம் குடியரசின் அங்கம் இல்லையா? நம் நாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இயங்கக்கூடியது.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் தமிழக அரசு அமர்ந்து பேசி நிலைமையை சரிசெய்ய வேண்டும். எங்கள் மாநிலம் எங்கள் அரசு என தயவுசெய்து யாரும் சொல்லாதீர்கள். இது, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட கூடிய நாடு.
மத்திய அரசின் திட்டங்களை திணிப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதை தமிழக மாணவர்களுக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான மனப்பான்மையுடன் இதுபோன்ற விவகாரங்களை கையாளாதீர்கள்.
தமிழகத்தில் தொடர்ந்து இருமொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் நிலையில், அத்தகைய நிலைப்பாட்டுக்கு எதிராக நவோதயா பள்ளிகள் இருக்கும் என தமிழக அரசு நினைத்தால், அது குறித்து தனியாக விசாரிக்கலாம்.
அடுத்த ஆறு வார காலத்திற்குள் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான இடங்களை கண்டறிய வேண்டும். இப்போதே பள்ளிகளை கட்ட வேண்டும் என உத்தரவிடவில்லை. மாறாக பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை மட்டும்தான் கண்டறிய உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் 2017ல் விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி, விசாரணையை ஆறு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.