
மதுரை:”நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அப்படி நடந்தால் அரசியல் சட்ட இயந்திரம் முடங்க வழி வகுத்து விடும்,” என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் கிளை மதுரை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் ஏழுமலை ராமரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘ திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர தீபத்தூணிலும், டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்ய செய்வது போலீசாரின் கடமை என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை நிறைவேற்றாததால் கலெக்டர் பிரவீன் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.
இதனை டிச.,3 ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பிற மனுதாரர்கள் உட்பட 10 பேரை மனுதார் அழைத்துச் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்றவும், அதற்கு சிஐஎஸ்எப் வீரர்களை அனுப்பவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தலைமைச் செயலர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதன்படி இன்று(டிச.,17) தலைமைச் செயலர், ஏடிஜிபி ஆகியோர் காணொலி காட்சியில் ஆஜராகினர். மதுரை போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் நேரில் ஆஜராகினர்.
லெக்டர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவிந்திரன், கூடுதல் அரசு பிளீடர் மாதவன் ஆகியோரும், போலீஸ் கமிஷனர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீர கதிரவன், கூடுதல் அரசு பொது பிளீடர் ரவி ஆகியோரும், கோவில் செயல் அலுவலர் சார்பில் ஜோதியும் ஆஜராகினர்.
அப்போது நீதிபதி கூறியதாவது நான் சோர்வடைந்து விட்டேன். நீதிமன்ற அவமதிப்புக்காக எத்தனை வழக்குகளில் அதிகாரிகளை கடிந்து கொள்வது? இன்று கூட, ‘நீதிமன்றம் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், அதன் உத்தரவை அமல் செய்யும்போது சட்டம் ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும்’ தலைமை செயலாளர் அறிக்கை வாசிக்கிறார்.
இது மன்னிக்க முடியாதது. ஒரு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அதைக்காட்டிலும் உயர்ந்த நீதி அமைப்பு தடை விதித்தாலோ அல்லது ரத்து செய்தாலோ தவிர, மற்ற அனைத்து சூழல்களிலும் செயல்படுத்த வேண்டியது அவசியம்.எதிர்பார்ப்பு
சில வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாத சூழல் இருக்கும் என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த சூழலை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அது மன்னிக்க முடியாதது.அப்படியெனில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கருதப்படும்.
அரசியல் சட்ட இயந்திரம் முடங்குவதற்கு வழிவகுத்து விடும்.வழக்கு 2026 ஜன.,9 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், தலைமை செயலாளர் பொறுப்பான நிலை எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.இவ்வாறு உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.