நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காத்மண்டு,
நேபாள நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் இருந்து வருகிறது.
இந்திய எல்லையில் சாலை அமைக்கக் கூடாது என நேபாள அரசு இந்தியாவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தது. அதனை தொடர்ந்து நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகரித்தது காரணம் இந்தியா தான் என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது. மேலும் இந்திய நாட்டு பகுதிகளை தங்கள் நாட்டு வரைபடத்தில் நேபாளம் இணைத்தது.
இதற்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் நேபாள நாட்டில் இன்று மாலையில் இருந்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேபாள அரசுக்கு எதிராகத் தவறான பிரச்சாரங்களை இந்த சேனல்கள் செய்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.