கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு

Spread the love

இந்தியாவில் கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்தாலும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பின் அளவு குறைவாகத்தான் இருக்கிறது. குறிப்பாக இறப்புவிகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவது புதிய நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

கொரோனா தொற்று தாக்கினாலும், உயிர் பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கையை தொற்று பாதிப்புக்குள்ளானோருக்கு இது தருவதாக அமைந்துள்ளது.

இதையொட்டி மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* இந்தியாவில் ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று இறப்புவிகிதம் 2.82 சதவீதமாக இருந்தது. இப்போது அது 2.72 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

* கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற இறப்பின் தேசிய சராசரி 2.72 சதவீதம் ஆகும். உலகின் பல நாடுகளை விட இது மிக குறைந்த அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த தேசிய இறப்பு விகிதத்தை விட 30 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இறப்புவிகிதம் குறைவாக இருக்கிறது. இதன்படி கேரளாவில் 0.41, ஜார்கண்டில் 0.71, பீகாரில் 0.82, தெலுங்கானாவில் 1.07, தமிழகத்தில் 1.39, அரியானாவில் 1.48, ராஜஸ்தானி 2.18, பஞ்சாப்பில் 2.56, உத்தரபிரதேசத்தில் 2.66 சதவீதமாக உள்ளது.

மணிப்பூர், நாகலாந்து, தத்ரா நகர்ஹவேலி, டாமன் தியு, மிசோரம், அந்தமான் நிகோபார், சிக்கிம் ஆகியவற்றில் கொரோனாவில் ஒருவர்கூட பலி இல்லை.

* இந்தியாவில் தொடர்ந்து இறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதற்கு, மத்திய அரசின் ஆதரவு, வழிகாட்டுதலுடன் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எடுத்து வருகிற நடவடிக்கைகளே காரணம். குறிப்பாக வயதானவர்கள், வயது முதிர்ந்தவர்கள், நாள்பட்ட நோயுடன் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்கள் ஆகியோர் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதும் இறப்புவிகிதம் குறைவதற்கு காரணம் ஆகும். கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ பராமரிப்பில் தரம் பராமரிக்கப்படுகிறது.

* கொரோனாவில் இருந்து குணம் அடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் தேசிய சராசரி 62.42 சதவீதம் ஆகும். ஆனால் 18 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதை விட அதிகளவில் குணம் அடைவோர் விகிதத்தை கொண்டுள்ளன. அந்த வகையில் இது மேற்கு வங்காளத்தில் 64.94, உத்தரபிரதேசத்தில் 65.28, ஒடிசாவில் 66.13, ஜார்கண்டில் 68.02, பஞ்சாப்பில் 69.26, பீகார் 70.40, குஜராத்தில் 70.72, மத்திய பிரதேசத்தில் 74.85, அரியானாவில் 74.91, ராஜஸ்தானில் 75.65, டெல்லியில் 76.81 சதவீதமாக உள்ளது.

* தற்போது நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 682 ஆகும். அவர்கள் அனைவரும் மருத்துவ மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

* கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் செல்வதற்கு, மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, பரிசோதனைகளை தீவிரப்படுத்தி இருப்பதும், தொற்று பாதிப்புக்குள்ளானவர்களை சீக்கிரமாக அடையாளம் காண்பதும், லேசான, முன் அறிகுறியுள்ளவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்துவதும், தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்கு திறமையான மருத்துவ சிகிச்சை அளிப்பதும், ஆஸ்பத்திரி கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் காரணம் ஆகும்.

* நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கென 1,218 அர்ப்பணிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2,705 சுகாதார மையங்களும், 10 ஆயிரத்து 301 கொரோனா பராமரிப்பு மையங்களும் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page