அமெரிக்காவில் புதிய உச்சமாக, ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

வாஷிங்டன்,
அமெரிக்க மாகாணங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை திறந்து விட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அசுர வேகம் எடுத்து வருகிறது.
நேற்று முன்தினத்துடன் முடிந்த 24 மணி நேரத்தில் அங்கு 63 ஆயிரத்து 200 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அங்கு கடந்த 7-ந் தேதி அதிகபட்சமாக 60 ஆயிரம் பேருக்கு தொற்று பாதித்தது நினைவுகூரத்தக்கது.
தற்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்தை கடந்து விட்டது. இந்த வைரசுக்கு அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 1.33 லட்சத்தை தாண்டி இருக்கிறது.
அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை அதிகரித்ததின் காரணமாகத்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு 4 கோடிப்பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.