துப்பாக்கி கலாசாரத்தை நோக்கி தி.மு.க. போய்விட்டது – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Spread the love

துப்பாக்கி கலாசாரத்தை நோக்கி தி.மு.க. போய்விட்டது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.


சென்னை,

சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு ஆலோசனை மையத்தை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தற்போது தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை அத்துமீறி போனதற்கு உதாரணமாக திருப்போரூர் எம்.எல்.ஏ.வின் தந்தை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- தி.மு.க. என்று சொன்னாலே வன்முறை கலாசாரம், ஊழல் இரண்டையும் அடிப்படையாக, அடையாளமாக கொண்ட கட்சி. அது அவர்கள் ரத்தத்தில் ஊறியது. ஆரம்ப காலங்களில் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து என அனைத்தும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது. 2006-2011 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது நில அபகரிப்பு சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது. அபகரிக்கப்பட்ட நிலங்களை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான் மீட்டுக் கொடுத்தார். அதற்காக தனிச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். ஏழைகளின் நிலங்கள் எல்லாம்கூட அந்தக் காலக்கட்டத்தில் அபகரிக்கப்பட்டது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனுஷனைக் கடித்து என்ற ஒரு பழமொழி உள்ளது. கடந்த காலங்களில், ஓசி பிரியாணி, ஓசி டீக்காக அடிப்பது, பியூட்டி பார்லரில் அப்பாவிப் பெண்களை அடித்துச் சித்ரவதை, தள்ளுவண்டிக்காரரை அடிப்பது என இப்படியெல்லாம் செய்யப்பட்டுள்ளது, இப்பொழுது உச்சக்கட்டமாக துப்பாக்கி கலாசாரம் தி.மு.க.வில் ஏற்பட்டது.

இது ஜனநாயக நாடு, ஏதாவது பிரச்சினை என்றால் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுக்கலாம், நீதிமன்றங்களை அணுகலாம். ஆனால் எம்.எல்.ஏ. என்ற வகையில் தானே சட்டத்தை கையில் எடுப்பது, லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியை வைத்து யாரை வேண்டுமானாலும் சுடுவேன் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக தான் சட்டம் அதை பார்க்கும். சட்டம் அதனுடைய கடமையை செய்துள்ளது.

மதுரையில், தி.மு.க. எம்.எல்.ஏ., வீட்டிற்குள் புகுந்து 2 குடிமகன்களை அச்சுறுத்தும் வார்த்தையில் திட்டி, செருப்பை தூக்கிக் காட்டுகிறார். ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ.வின் லட்சணத்தைப் பாருங்கள். ஆட்சியிலே இல்லாதபொழுதே இப்படியென்றால், தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் என்ன நிலைமையாகும்?. ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் துப்பாக்கி இருக்கும். இதை மாதிரி, எம்.எல்.ஏ.க்கள் வீடு புகுந்து எல்லோரையும் அடிப்பார்கள், கண்டிப்பாக நடக்கும். எதற்கெடுத்தாலும் அராஜகம், அட்டூழியம், அநியாயம் போன்றவைகளை செய்வதே தி.மு.க.வின் வழக்கமாகிவிட்டது. இன்றைக்கு எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய அப்பாவும் துப்பாக்கியால் சுட்டது என்பது துப்பாக்கி கலாசாரத்தை நோக்கி தி.மு.க. போய்விட்டது என்பதைத்தான் காட்டுகிறது.

கேள்வி:- தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கியின் நடமாட்டம் அதிகமாகியிருக்கிறதே, இது சம்பந்தமாக…

பதில்:- நிச்சயமாக சொல்கிறேன். எங்களிடம் எந்த கள்ளத் துப்பாக்கியும் இல்லை. என்னிடம் 2 துப்பாக்கிகள் இருக்கின்றன. நான் லைசன்ஸ் வைத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page