பாதை அமைப்பதில் தகராறு; வியாபாரி மீது துப்பாக்கி சூடு வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. கைது – சிறையில் அடைப்பு

Spread the love

பாதை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் கீரை வியாபாரி மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்


திருப்போரூர்,

திருப்போரூர் அருகே பாதை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் கீரை வியாபாரி மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த செங்காடு பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இமயம்குமார் என்பவருக்கும், திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் என்ற இதயவர்மன் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் நிலத்துக்கு பாதை அமைப்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் இமயம்குமார் தரப்பினர் அரிவாளால் வெட்டியதில் எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி மற்றும் அவரது உறவினர் குருநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்து, கேளம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டதில் அந்த வழியாக சென்ற தையூரை சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மோதலில் காயம் அடைந்த இமயம்குமார், சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

பின்னர் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இமயம்குமார் தரப்பினருக்கும், தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இமயம்குமார் ஆதரவாளர் ஒருவர் தாக்கியதில் எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். பதிலுக்கு எம்.எல்.ஏ. தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து துகள்கள் சிதறியதில் அந்த வழியாக சென்ற கீரை வியாபாரி சீனிவாசன் படுகாயம் அடைந்துள்ளார்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, இமயம்குமார் மற்றும் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த சீனிவாசன் ஆகிய 3 பேர் தரப்பில் இருந்தும் திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எம்.எல்.ஏ. இதயவர்மன் வீட்டில் இருந்து ஒரு கைத்துப்பாக்கியும், நேற்று முன்தினம் நடந்த தகராறில் பயன்படுத்தப்பட்ட ‘ஏர்கன்’ என்று சொல்லப்படும் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்த 2 துப்பாக்கிகளும் உரிமம் புதுப்பிக்கப்படாதவை.

இமயம்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ. இதயவர்மன் மற்றும் அவரது தந்தை லட்சுமிபதி உள்ளிட்டோர் மீது கொலைமுயற்சி, ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இமயம்குமார் தரப்பினர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, தான் சுட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சீனிவாசன் அளித்த புகாரில் எம்.எல்.ஏ. இதயவர்மன் சுட்டத்தில் தான் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 இருசக்கர வாகனங்கள், பொக்லைன் எந்திரம், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் சென்னை மேடவாக்கம் அருகே பதுங்கி இருந்த எம்.எல்.ஏ. இதயவர்மனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

எம்.எல்.ஏ. இதயவர்மன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள்.

அவருக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் செங்கல்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு காயத்ரி தேவி முன்னிலையில் எம்.எல்.ஏ. இதயவர்மன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.எல்.ஏ. இதயவர்மன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த மோதல் தொடர்பாக எம்.எல்.ஏ. இதயவர்மன் தரப்பை சேர்ந்த நிர்மல் (28), வாசுதேவன் (43), வெண்பேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (48), யுவராஜ் (44), வசந்த் (21), கந்தசாமி (49) மற்றும் மேடவாக்கத்தை சேர்ந்த ரமேஷ் (32), சுரேஷ்குமார்(45) ஆகிய 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 2 கார்கள் கைப்பற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page