மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்க்கு15 வயது சிறுவன் பலியாகினான்.
உலான்பாதர்,
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் உலக நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் இருந்து மீண்டு வருவதற்காக உலக நாடுகள் போராடி வருகின்றன.
இந்த நிலையில் சீனா மற்றும் அதன் அண்டை நாடான மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய் கண்டறியப்பட்டுள்ளது. புபோனிக் பிளேக் என்பது பாக்டீரிய நோய். இது மர்மோட் போன்ற காட்டில் வாழும் கொறித்து திண்ணும் உயிரினங்களால் பரவுகிறது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், பாதிக்கப்பட்ட நபர் 24 மணி நேரத்தில் உயிரிழக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் சீனா மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் 3-ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1-ந் தேதி மேற்கு மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தில் 2 பேருக்கு புபோனிக் பிளேக் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் 2 பேரும் மர்மோட் இறைச்சியை சாப்பிட்டதாக தெரிவித்தனர். எனவே மர்மோட் இறைச்சியை மக்கள் சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மங்கோலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கோவி அல்டாய் மாகாணத்தில் 15 வயதான சிறுவன் ஒருவன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டான்.
அந்த சிறுவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய்க்கு ஏற்பட்டுள்ள முதல் உயிரிழப்பாகும். இதனால் மங்கோலிய மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.