சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு – தேர்ச்சி சதவீதத்தில் சென்னை மண்டலம் 2-வது இடம்

Spread the love

நாடு முழுவதும் 18 லட்சத்து 73 ஆயிரம் பேர் எழுதிய சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது. தேர்ச்சி சதவீதத்தில் சென்னை மண்டலம் 2-வது இடத்தை பிடித்து இருக்கிறது.

 


சென்னை,

கொரோனா தொற்றால் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிலதேர்வுகளும், அதேபோல் கிழக்கு டெல்லியில் சட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிலதேர்வுகளும் கடந்த 1-ந்தேதி முதல் நடத்தப்படுவதாக இருந்தது.

கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் அது ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்தது. அதன் அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டு, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு கடந்த 13-ந்தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் மார்ச் மாதம் 20-ந்தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 20 ஆயிரத்து 387 பள்ளிகளில் இருந்து 18 லட்சத்து 85 ஆயிரத்து 885 மாணவ-மாணவிகள் எழுத பதிவு செய்திருந்த நிலையில், 18 லட்சத்து 73 ஆயிரத்து 15 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 17 லட்சத்து 13 ஆயிரத்து 121 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இது 91.46 சதவீதம் ஆகும்.

கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 91.10. இதனோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 0.36 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மாணவ- மாணவிகளில் தேர்ச்சி சதவீதத்தை பார்க்கும்போது, மாணவர்கள் 90.14 சதவீதமும், மாணவிகள் 93.31 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர்கள் 78.95 சதவீதமும் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். மாணவிகள், மாணவர்களை விட 3.17 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், ஒட்டுமொத்த பாடங்களில் 90 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 358 பேரும், 95 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் 41 ஆயிரத்து 804 பேரும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கையில், இந்த ஆண்டு இதில் மாணவ-மாணவிகள் பின்தங்கி இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் கீழ் 16 மண்டலங்கள் இருக்கின்றன. தேர்வு முடிவுகள் வெளியிடும் போது இந்த மண்டலங்களுக்கு என்று தேர்ச்சி சதவீதம் தனித்தனியாக வெளியிடப்படும்.

அந்த வகையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் திருவனந்தபுரம் 99.28 சதவீதம் தேர்ச்சி பெற்று, 16 மண்டலங்களில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. அதற்கு அடுத்ததாக 2-வது இடத்தில் சென்னை மண்டலம் 98.95 சதவீதம் தேர்ச்சியை பெற்று உள்ளது. சென்னை மண்டலம் தொடர்ச்சியாக 3-வது ஆண்டாக 2-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 3-வது இடத்தில் 98.23 சதவீத தேர்ச்சியுடன் பெங்களூரு இருக்கிறது.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் சென்னை மண்டலத்தில் சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பாலபவன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பி.ஹரினி என்ற மாணவி 500-க்கு 499 மதிப்பெண் பெற்று இருக்கிறார். இவர் சென்னை மண்டலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி என்று கூறப்படுகிறது.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவில், சென்னை மண்டலம் தேர்ச்சி சதவீதத்தில் 2-வது இடத்தை பிடித்து இருக்கிறது. சென்னை மண்டலத்தின் கீழ் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங் கானா மாநிலங்களும் புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் தீவு யூனியன் பிரதேசங்களும் வருகின்றன.

இந்த நிலையில் மாநிலங்களின் தேர்ச்சி சதவீதத்தில் (அனைத்து பாடங்களிலும்) 99.61 சதவீதம் தேர்ச்சியுடன் தமிழகம் முதல் இடத்தை எட்டிப்பிடித்துள்ளது. மாநிலத்தில் இருந்து 62 ஆயிரத்து 260 பேர் தேர்வு எழுதியதில், 62 ஆயிரத்து 19 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

அதற்கடுத்ததாக முறையே புதுச்சேரி(99.49 சதவீதம்), ஆந்திரா (99.44 சதவீதம்), கேரளா (99.30 சதவீதம்), தெலுங்கானா 99.21 (சதவீதம்) ஆகியவை வருகின்றன. இந்த வரிசையில் சென்னை மண்டலத்தின் கீழ் வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முதல் 5 இடங்களை (கேரளாவை தவிர்த்து) தக்க வைத்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page