சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து ராஜஸ்தான் ஐகோர்ட்டில் சச்சின் பைலட் வழக்கு – விசாரணை இன்று நடைபெறுகிறது

Spread the love

சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.


ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்-மந்தரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. சச்சின் பைலட்டை சமாதானப்படுத்த காங்கிரஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.

தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், இதனால் அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் சச்சின் பைலட் கூறி உள்ளார். இதனால் அவர் பாரதீய ஜனதாவுடன் இணந்து செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அசோக் கெலாட் கூட்டிய சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை.

தலைமை கொறடா கடிதம்

இதற்கிடையே துணை முதல்-மந்திரி பதவியில் இருந்தும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவரது ஆதரவு மந்திரிகளான விஸ்வேந்திர சிங், ரமேஷ் மேனா ஆகியோரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கொறடா உத்தரவை மீறி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது அரசியல் சாசனத்தின் 10-வது பிரிவின் கீழ் (கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அதிகாரம் வழங்கும் பிரிவு) நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி சபாநாயகர் சி.பி.ஜோஷிக்கு கடிதம் எழுதினார்.

காங்கிரஸ் தலைமை கொறடாவின் இந்த கடிதத்தை தொடர்ந்து, தங்களை ஏன் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி சச்சின் பைலட்டுக்கும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கும் சபாநாயகர் சி.பி.ஜோஷி கடந்த செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பினார். அதில் நோட்டீசுக்கு 3 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் கூறி இருந்தார்.

இதனால் அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே, எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன பிரிவுக்கு எதிராக மனுவில் சில திருத்தங்களை செய்ய மனுதாரர்கள் விரும்புவதாக கூறினார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய அனுமதி அளித்தனர்.

அதன்படி, பின்னர் திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனவே மனுவின் மீது இன்று விசாரணை நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page