5 கோபுரங்களுடன் பிரமாண்டமாய் அமைகிறது அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடுத்த மாதம் அடிக்கல் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

Spread the love

அயோத்தியில் 5 கோபுரங்களுடன் பிரமாண்ட அளவில் ராமர் கோவில் கட்டப்படுகிறது.

புதுடெல்லி,

அயோத்தியில் 5 கோபுரங்களுடன் பிரமாண்ட அளவில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி தீர்ப்பு அளித்தது. முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்குமாறும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பினால் பல்லாண்டு காலமாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தி பிரச்சினைக்கு முடிவு ஏற்பட்டது.

இந்த தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் ஒரு அங்கமாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையானது, ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரம் நடைபெறும், பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் நேற்று அனைத்து அறக்கட்டளை உறுப்பினர்களின் முக்கிய கூட்டத்துக்கு பின்னர் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த விழா பிரதமர் மோடியின் வசதிக்கேற்ப அடுத்த மாதம் 3-ந் தேதி அல்லது 5-ந் தேதி நடைபெறும், இதற்கான அழைப்பை அவர் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டது.

அயோத்தியில் 161 அடி உயரத்தில், 5 கோபுரங்களுடன் ராமர் கோவில் கட்டுவதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. முதலில் 3 கோபுரங்களுடன் ராமர் கோவில் கட்ட உத்தேசிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறபோது, அதுவே ராம ஜென்ம பூமிக்கு அவரது முதல் பயணமாக அமையும்.

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்டு 3-ந் தேதி அல்லது 5-ந் தேதி நடைபெறுவதை அறக்கட்டளை உறுப்பினரான காமேஷ்வர் சவுபால் உறுதிப்படுத்தினார். அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் மேலும் கூறியதாவது:-

இயல்பு நிலை திரும்பிய பிறகு நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு, கோவில் கட்டுமானத்துக்கான அனைத்து வரைபடங்களும் தயாரிக்கப்பட்டு, ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் 3 முதல் 3½ ஆண்டுகளில் முடியும்.

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தார் மண் பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். 60 மீட்டர் ஆழத்துக்கு கீழே உள்ள மண்ணின் வலிமையின் அடிப்படையில் அஸ்திவாரம் போடப்படும். வரைபடத்தின் அடிப்படையில் அஸ்திவார பணிகள் தொடங்கும்.

சோம்புரா மார்பிள்ஸ் சார்பில் கோவிலுக்கான செங்கற்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தார் தங்கள் பணிகளை மேற்கொள்வார்கள். செங்கற்கள் தொடர்பான பணிகள், சோம்புரா மார்பிள்ஸ் நிறுவனத்தாரால் மேற்கொள்ளப்படும். அவர்கள் ஒன்றிணைந்து பிரமாண்ட கோவிலை கட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page