உலகளவில் பலி 6 லட்சத்தை கடந்தது கொரோனாவின் மரணப்பசி தீருவது எப்போது?

கொரோனாவின் முதல் பலி, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி நேர்ந்ததாக பதிவாகி இருக்கிறது.
சீனாவுக்கு வெளியே கொரோனாவின் முதல் பலி என்றால் அது பிலிப்பைன்ஸ் நாட்டில் பிப்ரவரி 1-ந் தேதி பதிவானது.
ஆசியாவுக்கு வெளியே முதல் பலி என்றால், அது பிரான்சில் பிப்ரவரி 14-ந் தேதி நேரிட்டது.
கொரோனாவின் முதல் பலி நேர்ந்து 6 மாத காலம் ஆன நிலையில் உலகளாவிய பலி நேற்று 6 லட்சத்தை கடந்தது.
சரியாக சொல்வதென்றால், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் தகவல்படி, நேற்று மதிய நிலவரப்படி உலகமெங்கும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 2 ஆயிரத்து 711.
பலியில் முந்திக்கொண்டு இருப்பது அமெரிக்கா. அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 266. அமெரிக்கா இந்த நூற்றாண்டில் எந்தவொரு போரிலும் இத்தகைய உயிர்ப்பலியை சந்தித்த வரலாறு இல்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரசின் பிடியில் சிக்கி ஒவ்வொரு நாளும் பெரும் உயிர்ச்சேதத்தை அந்த நாடு சந்தித்து வருவது, அந்த மக்களுக்கு தீராத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல் 10 நாடுகள்
உலகளவில் கொரோனா பலியில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகளின் பட்டியல் இது-
1. அமெரிக்கா (1 லட்சத்து 42 ஆயிரத்து106)
2. பிரேசில் (77 ஆயிரத்து 964)
3. இங்கிலாந்து (45 ஆயிரத்து 233)
4. மெக்சிகோ (38 ஆயிரத்து 310)
5. இத்தாலி (35 ஆயிரத்து 28)
6. பிரான்ஸ் (30 ஆயிரத்து 155)
7. ஸ்பெயின் (28 ஆயிரத்து 420)
8. இந்தியா (26 ஆயிரத்து 273)
9. ஈரான் (13 ஆயிரத்து 791)
10. பெரு (12 ஆயிரத்து 799)
மேலும் 10 ஆயிரத்துக்கு அதிகமானோரை கொரோனாவுக்கு பலி கொடுத்த நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்தும் (12 ஆயிரத்து 295), ரஷியாவும் (12 ஆயிரத்து 106) இடம் பெற்றுள்ளன.
கொரோனாவின் மரணப்பசி தீருவது எப்போது என்பதுதான் இன்றைக்கு உலகளாவிய கேள்வியாக எழுந்து நிற்கிறது.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் உலகளாவிய எண்ணிக்கை நேற்று 1 கோடியே 41 லட்சத்தை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
ஊரடங்கு, முக கவசம், தனிமனித இடைவெளி, கைச்சுத்தம் என எத்தனையோ கட்டுப்பாடுகளை உலகம் பின்பற்றி வந்தாலும், நான் எதற்கும் கட்டுப்பட மாட்டேன் என்கிற வகையில் கொரோனா ஒவ்வொரு நாட்டிலும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.
கொரோனா பாதிப்பில் மிக மோசமான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 36 லட்சத்து 47 ஆயிரத்து 715 ஆகும்.
இரண்டாம் இடத்தில் பிரேசில் (20 லட்சத்து 46 ஆயிரத்து 328), மூன்றாவது இடத்தில் இந்தியா (10 லட்சத்து 38 ஆயிரத்து 716) உள்ளன.
4-ம் இடத்தில் உள்ள ரஷியாவில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 58 ஆயிரத்து 1 ஆகும். 5-ம் இடத்தில் இருக்கிற பெரு நாட்டில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 537 பேரும், 6-ம் இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 594 பேரும், 7-ம் இடத்தில் இருக்கிற மெக்சிகோவில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 298 பேரும், 8-வது இடத்தில் உள்ள சிலியில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 439 பேரும், 9-வது இடத்தில் இருக்கிற இங்கிலாந்தில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 804 பேரும், 10-வது இடத்தில் உள்ள ஈரானில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 440 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 லட்சத்துக்கு மேலான தொற்று பாதிப்புகளை கொண்ட நாடுகளாக பாகிஸ்தான், ஸ்பெயின், சவுதி அரேபியா, இத்தாலி, துருக்கி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளன.
கொரோனாவின் பயணம் முடிவுக்கு வருவது எப்போது என்பது உலக மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு.