12 கி.மீ. ஓடிச்சென்று கொலையாளியை காட்டி கொடுத்த மோப்ப நாய் மாலை அணிவித்து போலீஸ் அதிகாரி பாராட்டு

Spread the love

12 கி.மீ. தூரம் மோப்பம் பிடித்து சென்று, கொலையாளியை மோப்ப நாய் காட்டி கொடுத்தது. அந்த மோப்ப நாய்க்கு போலீஸ் அதிகாரி மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சூலக்கெரே பகுதியில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

கொலை நடந்த இடத்திற்கு 9 வயதான போலீஸ் மோப்ப நாய் துங்கா வரவழைக்கப்பட்டது. அங்கு இருந்து ஓடிய மோப்ப நாய் துங்கா, சூலக்கெரேயில் இருந்து 2 மணி நேரம் விடாமல் ஓடி சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசிபுரா தாண்டா கிராமத்தில் ஒரு வீட்டின் முன்பு போய் நின்றது. அந்த வீட்டில் இருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் பெயர் சேத்தன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் தனது நண்பரான சந்திரா நாயக் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது திருட்டு நகைகளை பங்கு பிரிக்கும்போது ஏற்பட்ட தகராறில் சந்திரா நாயக்கை, சேத்தன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மோப்ப நாய் துங்காவுக்கு மாநில போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அமர்குமார் பாண்டே மாலை அணிவித்து பாராட்டினார். இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைத்தலங்களில் வெளியாகி பலரது ஆதரவை பெற்றுள்ளது.

பின்னர் துங்காவை பராமரித்து வரும் சிவநாயக்கா என்பவருக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.

இதுகுறித்து சிவநாயக்கா கூறும்போது, பொதுவாக மோப்ப நாய்கள் 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் தான் மோப்பம் பிடித்து ஓடும். ஆனால் துங்கா 12 கிலோ மீட்டர் மோப்பம் பிடித்து ஓடி கொலையாளியை பிடிக்க உதவி செய்து உள்ளது. துங்கா சிறப்பு வாய்ந்த மோப்ப நாய். துங்காவால் இன்னும் 15 ஆண்டுகள் போலீஸ் துறையில் சேவை செய்ய முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page