சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான மேலும் 3 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதிமதுரை கோர்ட்டு உத்தரவு

Spread the love

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான மேலும் 3 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்து மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோரை காவலில் எடுத்து சி.பி.ஐ. போலீசார் விசாரித்தனர்.

இந்தநிலையில் அதே வழக்கில் சிறையில் உள்ள வெயிலுமுத்து, சாமத்துரை, செல்லத்துரை ஆகிய 3 போலீஸ்காரர்களையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமானந்த குமார் முன்பு நேற்று மாலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ்காரர்கள் வெயிலுமுத்து, செல்லத்துரை, சாமத்துரை ஆகிய 3 பேரும் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி, போலீசார் உங்களை காவலில் எடுத்து விசாரிக்க ஆட்சேபம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள், இல்லை என்றனர். பின்னர் உங்களின் உடலில் காயங்கள் எதுவும் இருக்கின்றனவா? என்று கேட்டதற்கும் அவர்கள், இல்லை என தெரிவித்தனர்.

அதேபோல சி.பி.ஐ. போலீசார் ஆஜராகி, “இவர்கள் 3 பேரையும் விசாரித்தால் இந்த வழக்கில் கூடுதல் விவரங்களை சேகரிக்க முடியும். எனவே அவர்களை காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.

விசாரணை முடிவில், சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான வெயிலுமுத்து, சாமத்துரை, செல்லத்துரை ஆகிய 3 பேரையும் வருகிற 23-ந்தேதி (நாளை மறுநாள்) வரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். மேலும் அவர்கள் 3 பேரின் மருத்துவ அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், 23-ந்தேதி மாலை 3 மணி அளவில் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் போலீஸ்காரர்கள் 3 பேரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட கூடுதல் ஆவணங்கள் தூத்துக்குடி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்து கொண்டு வந்து, மதுரை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page