கந்த சஷ்டி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,
கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் சென்னையில் உள்ள கருப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.
இதற்கிடையில் கருப்பர் கூட்டம் யூ-டியூப் பக்கத்தில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பல வீடியோக்கள் இருப்பதால், அந்த சேனலை முடக்க வேண்டும் என போலீசாரிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கருப்பர் கூட்ட்டம் சேனலை முடக்க வலியுறுத்தி சென்னை சைபர் கிரைம் போலீசார், யூ-டியூப் நிறுவத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் அந்த சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக நீக்கினர்.
இதனிடையே கந்த சஷ்டி கவசம் குறித்து பேசிய விவகாரத்தில் தொடர்புடையதாக மேலும் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னையில் நேற்று கைது செய்யப்பட்ட குகன், சோமசுந்தரம் ஆகிய இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் இந்த விவகாரத்தில் முன்னதாக கைது செய்யப்பட்ட செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு எழும்பூர் காவல் நிலையத்தில் சைபர் கிரைம் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.