லடாக் யூனியன் பிரதேசத்தில் லே நகரில் டோர்ஜி பால்மோ என்ற 30 வயது பெண்ணுக்கு கடந்த மாதம் 16-ந் தேதி இந்த ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது.
புதுடெல்லி,
தாய்ப்பால் என்பது குழந்தைக்கு தாய் ஊட்டும் அமுதம் மட்டுமல்ல, அன்பும்கூட.
இதை பருக முடியாத நிலை ஒரு பச்சிளம் குழந்தைக்கு வந்தது, பரிதாபம்தான்.
லடாக் யூனியன் பிரதேசத்தில் லே நகரில் டோர்ஜி பால்மோ என்ற 30 வயது பெண்ணுக்கு கடந்த மாதம் 16-ந் தேதி இந்த ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. இந்தக் குழந்தைக்கு தாய்ப்பால் பருக முடியாதபடிக்கு ஒரு விசித்திர நோய்.
உடனடியாக அந்த குழந்தையை டெல்லி போன்ற நகரங்களில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றால் காப்பாற்றி விடலாம் என தெரிய வந்தது. குழந்தையின் தந்தை வாங்டஸ் பணியாற்றுவதோ மைசூர். இதனால் குழந்தையை தாய்மாமன் ஜிக்மாட், விமானத்தில் ஜூன் 18-ந் தேதி டெல்லிக்கு கொண்டு வந்து அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். மைசூரில் இருந்து தந்தையும் டெல்லி விரைந்தார். டெல்லியில் கொரோனாவின் தீவிர பரவலால் குழந்தையுடன் தாய் வரவில்லை.
ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்து, குழந்தைக்கு வந்திருப்பது அபூர்வமான ‘டிராக்கியோசோபாகல் பிஸ்துலா’ நோய் என்றனர். அதாவது, குழந்தையின் சுவாச குழாயும், உணவுகுழாயும் இணைந்து இருந்தது. பிறந்து 4 நாளே ஆன குழந்தைக்கு சிக்கலான அறுவை சிகிச்சையை 3 மணி நேரம் செய்து டாக்டர்கள் சுவாச குழாயையும், உணவுக்குழாயையும் தனித்தனியே பிரித்து, காப்பாற்றினர்.
குழந்தைக்கு தினமும் தாய்ப்பால் தருவது நல்லது என டாக்டர்கள் அறிவுறுத்த, உடனே லேயில் உள்ள தாய்க்கு தகவல் பறந்தது. அவர் தாய்ப்பாலை சின்னச்சிறு புட்டிகளில் அடைத்து விமானம் மூலம் அனுப்ப அது 1000 கி.மீ. பயணித்து டெல்லி வந்து சேர, விமான நிலையத்துக்கு குழந்தையின் தந்தை அல்லது தாய்மாமா போய் பெற்று வந்து குழந்தைக்கு தினமும் ஊட்டி வருகின்றனர்.
இப்போது நலம் அடைந்துள்ள குழந்தை, லே நகருக்கு வெள்ளிக்கிழமை தந்தையுடனும், தாய் மாமனுடனும் விமானத்தில் பயணிக்க இருக்கிறது.
குழந்தையை கொஞ்சுதற்காக தாய், டோர்ஜி பால்மோ கனவுகளோடு காத்திருக்கிறார்.
இந்த குழந்தைக்கு தாய்ப்பாலை தினமும் எடுத்து வரும் தாராள மனம் கொண்ட தனியார் விமானம், கட்டணம் ஏதும் வசூலிக்க வில்லை என்பது சிறப்புத்தகவல். ஆமாம், தாய்ப்பாலுக்கு கட்டணம் விதிக்க முடியுமா?