தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை கொரோனா பரவலை தடுக்க தீவிரமாக போராடவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ரூ.3,054 கோடியே 58 லட்சம் செலவில் நிறைவேற்றப்பட இருக்கும் குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. சாலை, ரெயில் மற்றும் விமான மார்க்கம் மூலமாக வடகிழக்கு பிராந்தியத்துடனான இணைப்பை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பல்வேறு மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்படுவதால் மணிப்பூர் மாவட்டத்தில் மறியல், போராட்டங்கள் ஓய்ந்து உள்ளன. அசாம் மாநிலத்தில் வன்முறை ஓய்ந்து இருக்கிறது. இதேபோல் திரிபுரா, மிசோரம் மாநிலங்களிலும் இளைஞர்கள் வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்பி இருக்கிறார்கள்.
எனவே ஒட்டுமொத்தமாக வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவுகிறது. இதனால் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவ வடகிழக்கு மாநிலங்களில் தற்போது ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
கொரோனா பரவல் காரணமாக நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ள போதிலும், நாட்டில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை நோய்த் தொற்று பரவலை தடுக்க நாம் தீவிரமாக போராடவேண்டும். அதேசமயம் வளர்ச்சிப் பணிகளையும் நாம் முழு வேகத்தில் செயல்படுத்த வேண்டும்.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் வேளாண் பொருட்களையும், பிற உற்பத்தி பொருட்களையும் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன. இந்தியாவில் மூங்கில் தேவை அதிகமாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்கள் மூங்கில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், நாம் இறக்குமதியை சார்ந்து இருக்கும் நிலையை மாற்ற முடியும்.
மணிப்பூரில் நிறைவேற்றப்பட இருக்கும் குடிநீர் திட்டத்தின் மூலம் தலைநகர் இம்பால் மற்றும் பிற மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.