தியேட்டர்களை திறக்க ஆகஸ்டு மாதம் மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தியேட்டர் அதிபர்க்ள் காத்திருக்கிறார்கள்.

புதுடெல்லி,
நாடு முழுவதும் மார்ச் மாத இறுதியில் தியேட்டர்கள் மூடப்பட்டன. ஊரடங்கு கட்டுப்பாடுகளில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகஸ்டு மாதம் அமல்படுத்தப்படும் 3-வது கட்ட தளர்வின்போது, தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறி இருந்தது.
பல திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ்கள் சங்கம் சார்பில், தியேட்டர்களில் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை.
இதுகுறித்து பி.வி.ஆர். பிக்சர்ஸின் தலைமை செயல் அதிகாரி கமல் கியான்சந்தானி கூறியதாவது:-
தியேட்டர்களை திறக்காததால், மாதத்துக்கு ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இழந்ததை மீண்டும் பெற முடியாது. இருந்தாலும், இனிமேல் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நிலைமையை சீர்படுத்த முடிவு செய்துள்ளோம்.
அதன்படி, ரசிகர்களுக்கு காகித வடிவிலான டிக்கெட்டுக்கு பதிலாக, அவர்களது செல்போனுக்கு ஒரு பார்கோடு ஸ்கேனர் லிங்க் அனுப்பப்படும். அதை ‘ஸ்கேன்‘ செய்து, அரங்குக்குள் நுழையலாம்.
இருக்கைகள் போதிய இடைவெளியுடன் அமைக்கப்படும். மல்டிபிளக்ஸ்களில் படம் தொடங்கும் நேரம், ஒவ்வொரு திரைக்கும் வேறுபடும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திரைகளில் இடைவேளை விடப்படாது.
ஒவ்வொரு காட்சி முடிந்தவுடன், கிருமிநாசினி தெளிக்கப்படும். அதற்காக அடுத்த காட்சி தொடங்க போதிய இடைவெளி அளிக்கப்படும்.
உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர். சானிடைசர் எந்திரம், நுழைவாயிலில் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.