ரஷியாவை சேர்ந்தவர், பிரபல வரலாற்று ஆய்வாளர் யூரி டிமிட்ரியெவ்.

மாஸ்கோ,
ரஷியாவை சேர்ந்தவர், பிரபல வரலாற்று ஆய்வாளர் யூரி டிமிட்ரியெவ். இவர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சோவியத் புரட்சியாளர் ஜோசப் ஸ்டாலினின் குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக செலவழித்தவர் ஆவார். 1930-களில் மரண தண்டனை களமாக செயல்பட்ட இடங்களை கண்டறிந்து பிரபலம் ஆனார்.
இவர் 12 வயதான சிறுமியாக இருந்த தனது வளர்ப்பு மகளை ஆபாசமாக படம் எடுத்து, பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
ஆனால் யூரி டிமிட்ரியெவ் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவரது கூட்டாளிகளும், வரலாற்று ஆய்வாளர் என்ற நிலையில் அவரது கண்டுபிடிப்புகளை இழிவுபடுத்தும் வகையில் சதி செய்து இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக கூறினர்.
இருப்பினும் அவர் மீதான வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், அவர் மீதான ஆபாச பட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி 3½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அரசு தரப்பில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு கோரப்பட்ட நிலையில், குறைந்த கால சிறைத்தண்டனை விதித்து இருப்பதை யூரி டிமிட்ரியெவ்வின் கூட்டாளிகள் வரவேற்றுள்ளனர்.
அவர் தண்டனையின் பெரும்பகுதியை ஏற்கனவே சிறையில் கழித்து விட்டதால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் விடுதலை செய்யப்படுவார் என மாஸ்கோவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.