புதுடில்லி: ஏப்.,14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் குறித்து பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில், எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனைகள், பரிந்துரை வழங்கினர். ஊரடங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொருவரின் உயிரை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலகமே, கடுமையான சவாலை எதிர்கொண்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலை, மனிதர்குல வரலாற்றில், தற்போதைய காலகட்டத்தையே மாற்றும் வகையில் உள்ளது. கொரோனாவை எதிர்த்து நாம் போராட வேண்டும். இந்த வைரசுக்கு எதிராக மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
தற்போது, நாட்டில் நிலவும் சூழ்நிலை சமூக அவசர நிலைக்கு ஒப்பாக உள்ளது. இது கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையை உண்டாக்கியுள்ளது. நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழ்நிலையை உண்டாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு காலகட்டத்தை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், மற்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதல்வர்களுடன் ஆலோசனை
இதனிடையே, பிரதமர் மோடி வரும் 11ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் முறையில், மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.