தமிழகத்தில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை: புதிதாக 6,993 பேர் பாதிப்பு; 5,723 பேர் ‘டிஸ்சார்ஜ்’

Spread the love

தமிழகத்தில் ஒரே நாளில் 61 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புதிதாக 6,993 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். 5,723 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

 


சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 61 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4,162 ஆண்கள், 2,831 பெண்கள் என 6,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 34 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 351 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 911 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,138 பேரும், திருவள்ளூரில் 474 பேரும், செங்கல்பட்டில் 448 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 21 பேரும், கரூரில் 7 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 23 லட்சத்து 24 ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 50 பேரும், தனியார் மருத்துவமனையில் 27 பேரும் என 77 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னையில் 21 பேரும், செங்கல்பட்டு, மதுரை, திருவள்ளூர், வேலூர், விருதுநகரில் தலா 6 பேரும், காஞ்சீபுரத்தில் 5 பேரும், கோவை, தென்காசியில் தலா 3 பேரும், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கையில் தலா இருவரும், திருச்சி, திருப்பூர், திருப்பத்தூர், தேனி, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், திண்டுக்கலில் ஒருவரும் என 20 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் 3,571 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 723 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதில் சென்னையில் 1,821 பேரும், விருதுநகரில் 628 பேரும், ராணிப்பேட்டையில் 397 பேரும் அடங்குவர். இதுவரையில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 54 ஆயிரத்து 896 பேர் உள்ளனர்.

மேலும் புதிதாக ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 58 அரசு நிறுவனம், 59 தனியார் நிறுவனம் என மொத்தம் 117 நிறுவனங்களில் பரிசோதனைகள் நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page