அமெரிக்கா உருவாக்கிய தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனை: 30 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பு

Spread the love

கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கிய தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. நேற்று தொடங்கிய இந்த பரிசோதனையில் 30 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


வாஷிங்டன்,

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாகியும் எந்தவித மந்தமும் இல்லாமல் வேகமாக உலக நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர்.

எனவே இந்த ஆட்கொல்லி வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் இறங்கி உள்ளன. இதில் பல நாடுகள் தொடக்ககட்ட வெற்றியை ஈட்டியுள்ளன. இதனால் இந்த தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன.

இதில் சீனா மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்றவை தயாரித்த தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையை எட்டி உள்ளன. பிரேசில் போன்ற அதிக பாதிப்பு உள்ள நாடுகளில் இந்த தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

இதைப்போல அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி ஏற்கனவே தொடக்ககட்ட சோதனைகளை முடித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியது.

இதில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து 30 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு உண்மையான மருந்தும், மீதமுள்ளவர்களுக்கு போலி மருந்தும் செலுத்தப்பட்டது.

இவர்கள் அனைவரையும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒரே முறையாக 30 ஆயிரம் பேரிடம் தடுப்பூசி பரிசோதனை நடத்துவது முக்கியமான சாதனையாகும்.

முன்னதாக இந்த தடுப்பூசியை பல்வேறு இனத்தினர், பலவேறு வயதுக்குட்பட்டவர்கள் என அமெரிக்காவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் மக்களிடம் செலுத்தி சோதிக்க வேண்டியது முக்கியமானது என டாக்டர்கள் கூறியிருந்தனர். அந்தவகையில் தற்போது பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களிடம் இந்த தடுப்பூசி செலுத்தி சோதிக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசியின் தொடக்ககட்ட சோதனையில் பங்கேற்றவர்கள், மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதனால் தடுப்பூசி பரிசோதனைக்கு 1½ லட்சம் பேர் வரை பதிவு செய்தனர்.

இந்த தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையை எட்டியுள்ள போதிலும், இது பாதுகாப்பானதா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த தடுப்பூசியின் முதற்கட்ட சோதனையில் பங்கேற்றவர்களுக்கு காய்ச்சல், தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி போன்ற சின்னச்சின்ன பக்க விளைவுகள் இருந்தன.

அதேநேரம் இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவை எதிர்த்து நிற்பதற்கு இது முக்கிய தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பரிசோதனை வெற்றி பெற்றால் வர்த்தக ரீதியில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை மாடர்னா நிறுவனம் தொடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page