மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை ஏழை-பணக்காரர் இடையே டிஜிட்டல் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவினர் உருவாக்கிய புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. 5-ம் வகுப்புவரை தாய்மொழியில் கல்வி, மும்மொழி கொள்கை, உயர்கல்வியில் சீர்திருத்தம் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இந்த கல்விக்கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சி இந்த புதிய கல்விக்கொள்கை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களான, முன்னாள் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பல்லம் ராஜு, செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, ராஜீவ் கவுடா ஆகியோர் நேற்று டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கொரோனா தொற்றால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் புதிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டு இருப்பது கேள்விக்குரியது. நமது நிகழ்கால மற்றும் எதிர்கால தலைமுறையினரிடம் விளைவுகள் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தப்போகும் இந்த கல்வி கொள்கை நாடாளுமன்ற மேற்பார்வையை கூட பெறவில்லை.
பள்ளி மற்றும் உயர்கல்வியில் சீர்திருத்தங்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை-2020 வெறும் கவர்ச்சியான வார்த்தைகள், பளபளப்பு தோற்றம் போன்றவற்றை மட்டுமே கொண்டிருக்கின்றன. மாறாக அதை செயல்படுத்துவதற்கான செயல் திட்டமோ, யுக்திகளோ, தெளிவான வரையறுக்கப்பட்ட மைல்கற்களோ, திட்டங்களுக்கான நிதிவசதி குறித்தோ எதுவும் இதில் குறிப்பிடவில்லை.
பொது கல்வியை தனியார்மயமாக்குவதன் மூலம் ஏழை மற்றும் பணக்காரர் இடையே ஒரு டிஜிட்டல் பிளவை உருவாக்குகிறது. இது நடுத்தர வர்க்கம் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி எட்டாமல் போக வழிவகுக்கும்.
மேலும் புதிய கல்விக்கொள்கையில் ஆன்லைன் கல்வி குறித்த நோக்கம் ஒன்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் ஆன்லைன் கல்விக்கான அணுகல் மட்டத்தில் பரந்த ஏற்றத்தாழ்வு உள்ளது. தனிப்பட்ட வசதி காரணமாக மட்டுமல்லாமல், இணைப்பின் தரத்தின் அடிப்படையிலும் இது நீடிக்கிறது. இது ஒரு பெரிய டிஜிட்டல் பிளவுகளைக் கொண்டுவரும்.
புதிய கல்விக்கொள்கை காகித வடிவிலான ஒரு ஆவணமாகவே இருக்கிறது. ஏனெனில் அதன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி எதுவும் அதில் இல்லை. பள்ளிகளில் காலியாக உள்ள 12 லட்சம் ஆசிரியர் பணியிடங் களை அரசு எவ்வாறு நிரப்பப்போகிறது? நாட்டில் 10 சதவீத பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளன. இதில் 4 சதவீம் மட்டுமே இணையதள வசதி பெற்றுள்ளது.
இல்லாத அல்லது குறைந்துவிட்ட இணையதள வசதி மற்றும் கிராமப்புறங்களில் கணினிகளின் பயன்பாடு குறைவு காரணமாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பிளவுகளை இது மேலும் வலுவாக்கும்
ஒட்டுமொத்த கல்விக்கொள்கையிலும் தலித் பிரிவினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட, சமூகத்தில் பின்தங்கிய இவர்களை பற்றி எத்தகைய விவாதமும் இல்லை.
மொத்தத்தில் புதிய தேசிய கல்விக்கொள்கையானது மனித வளர்ச்சி மற்றும் அறிவு விரிவாக்கத்தின் அடிப்படை இலக்கை இழக்கிறது. இது உயர் கல்வியின் பரிணாம வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று சொல்ல தேவையில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.