இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு எதிராக போராட்டம் வலுக்கிறது.

ஜெருசலேம்,
இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேட்டன்யாஹூ, 5-வது முறையாகக் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி ஏற்றார்.
ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நேட்டன்யாஹூ இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பாதிப்பை முறையாக கையாளவில்லை என்றும், அதனால் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அவரை பதவி விலக வலியுறுத்தி அங்கு கடந்த சில மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. தற்போது இந்த போராட்டம் மேலும் வலுப்பெற்றுள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் ஜெருசலேமில் உள்ள நேட்டன்யாஹூவின் அரசு இல்லம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டக்காரர்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு பெரும் திரளாக திரண்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் நேட்டன்யாஹூவை பதவி விலக வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஒரு சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பலரை போலீசார் கைது செய்தனர்.