யார் வருமானவரி கணக்கை எந்த அதிகாரி ஆய்வு செய்கிறார் என்று யாருக்கும் தெரியாத வகையிலான புதிய முறை சோதனை அடிப்படையில் மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை,
தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் எம்.எல்.கர்மக்கர், சென்னை மண்டல தலைமை கமிஷனர் ஜஹான்சீப் அக்தர் ஆகியோர் இணையவழி மூலமாக நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
வருமான வரி கணக்கை எளிதாக தாக்கல் செய்யும் வகையில் புதிய திட்டத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டு, அக்டோபர் மாதம் 7-ந்தேதி சோதனை அடிப்படையில் மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய 4 மண்டலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வரி செலுத்துபவர்கள் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்யும்போது அவர்களுக்கு தேவையான தகவல்கள் வழங்கப்படும்.
குறிப்பாக வருமானம், முதலீடு, பிற வழிகளில் வருமானம் போன்றவற்றை குறிப்பிடாமல் தவறாக கணக்கு தாக்கல் செய்தால் நவீன தொழில்நுட்பம் மூலம் உடனடியாக அது தெரிந்துவிடும். இதனால் உடனடியாக அதனை திருத்தி கணக்கை தாக்கல் செய்ய முடியும். வருமானவரி கணக்கு தாக்கல் செய்த பிறகு மேல்முறையீடு மற்றும் விசாரணை போன்றவை இல்லாமல் நடைமுறை சரி செய்யப்படும்.
அதேபோல் முன்பு, சென்னை மண்டலத்தில் உள்ள கணக்குகளை சென்னை மண்டல அதிகாரிகள் பரிசீலனை செய்வார்கள். ஆனால் இந்த புதிய திட்டத்தில் ஒரு மண்டலத்தில் உள்ள கணக்குகளை வேறு மண்டலத்தில் உள்ள அதிகாரிகள் பரிசீலனை செய்ய முடியும். இதனால் வரி செலுத்துபவர்களுக்கு தங்கள் கணக்கு யார் பரிசீலிக்கிறார்கள் என்றும், பரிசீலனை செய்யும் அதிகாரிகள் யாருடைய கணக்கை பரிசீலிக்கிறோம் என்றும் தெரிய வாய்ப்பு இல்லை.
குறிப்பாக யார் வருமான வரி கணக்கை, எந்த அதிகாரி ஆய்வு செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. இதனால் முறைகேடுகள் நடக்காமல் வருமான வரி கணக்குகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் பரிசீலிக்கப்படும்.
அதேபோல் ஒரு கணக்கினை 4 அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். வரி செலுத்துபவர்களுக்கும், வருமான வரித்துறைக்கும் இந்த திட்டம் எளிமையானதாக இருக்கும். வரி செலுத்துபவர்களுக்கு வருமான வரித்துறை அலுவலகம் சென்றுதான் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதில்லை. வீடுகளில் இருந்தபடியே கணக்குகளை எளிமையாகவும், பிழை இல்லாமலும் தாக்கல் செய்ய முடியும்.
இதனால் வரி செலுத்துபவர்களுக்கு நேரம் மிச்சமாகும். 8 ஆயிரத்து 569 வருமான வரி அறிக்கைகளில் 1,900 அறிக்கைகள் பரிசீலனை முடிந்து உள்ளது. கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது மீண்டும் வேகம் எடுத்து உள்ளது. இதுகுறித்து வரி செலுத்துபவர்களுக்கு போதிய விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு உள்ளது. வரி செலுத்துபவர்களிடமும் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பேட்டியின்போது பத்திரிகை தகவல் அலுவலக இயக்குனர் ஜெனரல் வெங்கடேஷ்வர் உடன் இருந்தார். இயக்குனர் குருபாபு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இருந்தார்.