பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்; வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்கள் வழங்கினர்

Spread the love

அரசு வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் வழங்கினர்.

சென்னை,

அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் விலை இல்லா பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது. நடப்பு கல்வியாண்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போய்க்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் கல்வித்துறை சார்பில் தொலைக்காட்சிகள் வாயிலாக மாணவர்களுக்கு பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

அதற்கு பாடப்புத்தகங்கள் மிகவும் அவசியம் என்பதால், அதை வழங்குவதற்கான பணிகளில் பள்ளி கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டன.

அதன் தொடர்ச்சியாக தற்போது 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சமீபத்தில் பள்ளிக்கல்வி துறை சார்பில் வெளியிடப்பட்டது. அதில் மாணவ-மாணவிகள் முககவசம் கண்டிப்பாக அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே பாடப்புத்தகங்களை பள்ளிகளில் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் நேற்று ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களை வழங்கினர். மேலும் புத்தக பை, செருப்பு உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page