கொரோனா பரவல் எதிரொலியாக கவர்னர் மாளிகையில் நடக்கும் சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,
சுதந்திர தினத்தன்று கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு தேனீர் விருந்து அளிக்கப்படும். ஆனால் தற்போது கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் கவர்னர் மாளிகையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் ராஜ்பவனில் இருந்து செய்திக் குறிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சியை, கொரோனா பரவல் காரணமாக நடத்துவதில்லை என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் முடிவு செய்துள்ளார்.
காவேரி ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர்கள், கவர்னருக்கு 3-ந் தேதி (நேற்று) மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அவர் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது. அவரது உடல் நிலையை டாக்டர்கள் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.