அயோத்தி ராமர் கோவில் உலகம் உள்ளவரை முழு மனிதகுலத்தையும் காக்கும் என பிரதமர் மோடி கூறினார்.
அயோத்தி
ராமபிரான் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் நீண்டநாள் ஆசையாகும். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ். எஸ். போன்ற அமைப்புகள் நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. ஆனால் அங்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்ததால் இந்த முயற்சிகள் நிறைவேறாமல் இருந்தன.
பல்லாண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப்போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.
எனவே ‘ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. அயோத்தி ராமஜென்மபூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்து, இந்த அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அதன்படி ஆகஸ்டு இன்று ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-
நாடு முழுவதும் இருந்து வருகை தந்துள்ள ஆன்மிக தலைவர்களுக்கு எனது வணக்கம். உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்து கொண்டதை எனது பாக்கியமாக கருதுகிறேன்.ஒரு கட்டத்தில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவோம் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார்கள்.
நாடு முழுவதும் ராம மயமாக இருக்கிறது. இப்படி ஒரு நன்னாள் வந்ததை பலராலும் தற்போது வரை நம்ப முடியவில்லை.சரயு நதிக்கரையோரம் பொன்னான வரலாறு பொறிக்கப்பட்டு உள்ளது.வாழ்க்கையில் மிகவும் வியப்புக்கு உரிய விஷயங்கள் நிறைவேறி உள்ளன.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதித்து அனைத்து தரப்பு மக்களும் அமைதி காத்தது பெருமைக்குரிய விஷயம்.நமது நீதித்துறையின் மாண்புக்கு சான்றாக ராமர் கோயில் விளங்குகிறது.
உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன.அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது வரலாறு; இந்த வரலாற்றுக்கு சான்று அளிக்கும் வகையில் உலகமே பார்க்கிறது.
ஸ்ரீ ராம் பெயரைப் போலவே அயோத்தியில் கட்டப்படவுள்ள இந்த பிரமாண்டமான ராமர் கோயில் இந்திய கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் என்று நான் நம்புகிறேன். இது முழு மனிதகுலத்தையும் உலகம் உள்ள வரை காக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.