தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்புப் பணிகளை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் மிகவும் குறைவு தான். தமிழகத்தில் கொரோனா மரணங்கள் விகிதம் 1.62 சதவீதமாக உள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் 0.7 சதவீதமாகவே இருக்கிறது.
ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அலட்சியம் காட்டாமல் முகக்கவசம் அணிய வேண்டும். அதன் மூலம் ஊரகப் பகுதிகளில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு 70 ஆயிரமாக இருந்த படுக்கை வசதிகள், தற்போது 1.18 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொற்றின் தாக்கத்துக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது படுக்கை வசதி இல்லாமல், ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகளுக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் ரூ.75 கோடி மதிப்பிலான பணிகள் முடிவடைந்துள்ளது. தனியாக கட்டிட வசதியுடன் 50 படுக்கைக்கு மேல் இருந்தால் அங்கு ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் 104 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறினார்.