இதயத்தை பதம் பார்க்கும் கொரோனா வைரஸ் – மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

Spread the love

கொரோனா வைரஸ் பாதிப்பு இதயத்தை பதம் பார்க்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.


கொல்கத்தா,

கொரோனா வைரஸ் பற்றி ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று ஒருவரை தாக்கினால் அவரது நுரையீரலையும், சிறுநீரகத்தையும் தாக்குகிற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதை ஆய்வு தகவல்களும் உறுதிப்படுத்தி உள்ளன. இந்த நிலையில் இப்போதைய புதிய தகவல், கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால் இதயத்தையும் அது பதம் பார்க்கும் என்பதுதான். இதுபற்றிய முக்கிய தகவல்களை கொல்கத்தாவில் உள்ள பி.எம்.பிர்லா இதய ஆராய்ச்சி மையம் வெளியிட்டு உள்ளது.

இந்த மையம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிற 5 நோயாளிகளில் ஒருவருக்கு சுவாச பிரச்சினை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதுதான்.

இதுபற்றி மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, “20 சதவீத கொரோனா நோயாளிகள் தங்களுக்கு நெஞ்சு வலி இருப்பதாகவும், மூச்சு திணறல் இருப்பதாகவும் கூறுகின்றனர். இது ஒரு கட்டத்தில் மாரடைப்புக்கும் வழிநடத்தும் வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள்.

இதுபற்றி பி.எம்.பிர்லா இதய ஆராய்ச்சி மையத்தின் தலையீட்டு இதயவியல் துறையின் இயக்குனர் டாக்டர் திமன் கஹாலி விளக்கினார்.

“கொரோனா வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய பிரச்சினை இதயத்தை பாதிக்கும். கொரோனா வைரஸ் தொற்று இதயத்தை ஏன் சேதப்படுத்துகிறது என்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன என ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் தொற்று நேரடியாக இதய அமைப்பை காயப்படுத்துகிறது.

கொரோனா வைரஸ் நோயாளிகளும் தங்களுக்கு மார்பு வலி இருப்பதாகவும், மூச்சு திணறல் உள்ளதாகவும் கூறுகிறார்கள். இறுதியில் இது அவர்களை மாரடைப்பில் கொண்டு போய் விட்டு விடும் வாய்ப்பும் உள்ளது” என்கிறார் அவர்.

உடல் வீக்கம்

கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதிக்கிறபோது, உடல் முழுவதும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அது இதயத்தை பாதித்தால், அதன் விளைவுகள் மோசமாகலாம். ஏற்கனவே இதய நோய் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானது. கொரோனாவுக்கு முன்பாக இதயத்தில் பாதிப்பு இல்லாதவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் பிடியில் சிக்குகிறபோது இதயம்சேதம் அடைகிறது.

இதய நோய் இருப்பவர்கள், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களிடம் இருந்து எப்போதும் விலகியே இருக்க வேண்டும். தொடர்ந்து சிகிச்சை அவசியம். இன்புளூவென்சா, நிமோனியா நோய்களுக்கான தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

10 கட்டளைகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கான பாதிப்பு நம்மை அதிகமாக வந்து சேராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்? மருத்துவ நிபுணர்கள் தரும் 10 கட்டளைகள்:-

1. உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்.

2. சீரான உணவு சாப்பிடுங்கள், போதுமான தூக்கம் தூங்குங்கள்.

3. நண்பர்களுடனும், குடும்பத்தினருடன் பேசும்போது தனிமனித இடைவெளியை கடைப்பிடியுங்கள்.

4. மது குடிக்காதீர்கள். போதைப்பொருட்கள், புகையிலைப்பொருட்கள் பயன்படுத்தாதீர்கள்.

5. கொரோனா பற்றி பேசுவதை குறையுங்கள்.

6. பதற்றம் தவிருங்கள். மனதை லேசாக வைத்துக்கொள்ளுங்கள்.

7. முடிந்தவரை வீட்டில் இருங்கள். காய்ச்சல், மார்பு தொற்று என்றால் தனிமைப்படுத்தி கொண்டு, டாக்டரை தொடர்பு கொள்ளுங்கள்.

8. எப்போதும் முக கவசம் அணியுங்கள். கைச்சுத்தம் மறவாதீர்கள்.

9. உங்கள் கண்களை, மூக்கை, வாயை தொடுவதை தவிருங்கள்.

10. கதவின் கைப்பிடிகள், சுவிட்சுகள், டி.வி. ரிமோட், செல்போன் போன்றவற்றை கிருமிநாசினி கெண்டு சுத்தப்படுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page