மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல்லை, தென்காசி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

Spread the love

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதையொட்டி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 3.80 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 647 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 122.83 அடியாக உயர்ந்துள்ளது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 72 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 528 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் கொடுமுடியாறு அணை நீர்மட்டமும் 42 அடியாக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற 40 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேறுகிறது. இதுதவிர கடையம் ராமநதி அணை நிரம்பி விட்டது. கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 74 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 484 கனஅடியாக உள்ளது.

கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.28 அடியாக உள்ளது. அணைக்கு 59 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 125 அடியாக உள்ளது. நீர்வரத்து 110 கன அடியாக உள்ளது. இந்த அணையும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சேலத்தில் நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சில நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பலத்த மழை பெய்தது. பின்னர் நேற்று காலை வரை சாரலாக பெய்தது. தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் உள்ள அப்துல்கலாம் மணிமண்டபம் முன்பு மழைநீர் குளம்போல் தேங்கியது. பாம்பன் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

கடலூர் மாவட்டம் கீழ்செருவாயில் அதிகபட்சமாக 112 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கனமழையால் பெண்ணாடம் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மண்பாதை அடித்து செல்லப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page