வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ – சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

Spread the love

குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.


புதுடெல்லி,

இந்து பெண்கள் சொத்து சட்டப்படி, ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளைகள் அந்த வீட்டில் தங்குவதற்கு மட்டுமே உரிமை இருந்தது. அவர்களால் குடும்ப சொத்தில் உரிமை கொண்டாட முடியாது. பிறந்த வீட்டில் அளிக்கப்படும் சீதனம் மட்டுமே பெண்களின் சொத்தாக கருதப்பட்டது.

இந்தநிலையில் 1956-ல் ‘இந்து வாரிசு உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி குடும்பத்தின் சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த சட்டத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 25.3.1989-க்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து பெண் தங்கள் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கேட்க முடியாது. அதற்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர உரிமை உண்டு. எனினும் சொத்து பாகப்பிரிவினை 25.3.1989-க்கு முன்பு செய்யப்பட்டிருந்தால் அந்த சொத்தில் உரிமை கோர முடியாது என்று கூறப்பட்டது.

இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், ‘இந்து வாரிசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பு தந்தை உயிர் இழந்து இருந்தால் பெண்கள் அந்த சொத்தில் உரிமை கோர முடியாது’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்தும் இந்து குடும்பத்தில் பரம்பரை சொத்தில் மகள்களுக்கு சம உரிமை வழங்கிய இந்து வாரிசு திருத்தச் சட்டம் 2005 தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், 2015 மற்றும் 2018-ல் சுப்ரீம் கோர்ட்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனால் இந்த விவகாரத்தில் சட்டரீதியான கேள்வி எழுந்தது.

இதற்கிடையே டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நசீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்தநிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி இந்து கூட்டு குடும்ப சொத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு என நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:-

ஒரு இந்து குடும்பத்தில், அந்த குடும்பத்தின் சொத்தில் மகள்களுக்கான சம உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்து கூட்டு குடும்பத்தின் சொத்து பாகப்பிரிவினையில், தந்தை இந்து வாரிசு உரிமை சட்டம்-2005 திருத்தத்துக்கு முன்பு இறந்து இருந்தாலும் அந்த குடும்பத்தின் ஆண் மக்களுக்கு உள்ளதை போலவே பெண் மக்களுக்கும் அந்த சொத்தில் சம உரிமை உண்டு.

ஏற்கனவே இந்து வாரிசு உரிமை சட்டம் 1956, மகள்களுக்கு வழங்கிய சம உரிமை இன்றும் செல்லும். பெண் மக்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுக்க முடியாது.

எனவே, இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் ஏதேனும் கோர்ட்டுகளில் நிலுவையில் இருந்தால் அவற்றை 6 மாதங்களுக்குள் அந்த கோர்ட்டுகள் முடித்து வைக்க வேண்டும்.

இவ்வாறு இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பின்போது நீதிபதிகள், ‘ஒரு குடும்பத்தில் மகள் என்பவள் எப்போதுமே அந்த குடும்பத்தின் அன்பு மகள்தான். வாழ்நாள் முழுவதும் அவள் மகளாகவே இருக்கிறாள். மகனோ தனக்கு ஒரு மனைவி வரும் வரைதான் மகனாக இருக்கிறான்’ என்று குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page