பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 86-வது பிறந்த நாள்: உருவப் படத்துக்கு இரா.கண்ணன் ஆதித்தன் மலர்தூவி மரியாதை

Spread the love

மாலை முரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 86-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மாலை முரசு நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனும், மாலை முரசு அதிபருமான மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 86-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, சென்னை ஆயிரம் விளக்கு அண்ணா சாலையில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில், அவரது உருவப் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு அவரது மூத்த மகனும் மாலை முரசு நாளிதழ் மற்றும் மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனருமான இரா.கண்ணன் ஆதித்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஊழியர்களும் மலர்தூவி மரியாதை செய்தார்கள்.

இதேபோல், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.விஜயகுமார், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அருண்குமார் உள்பட ஏராளமானோர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் அவரது இல்லத்தில், பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதேபோல், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், அவருடைய கட்சி அலுவலகத்தில் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாட்டில் மற்ற ஊர்களில் உள்ள மாலை முரசு அலுவலகங்களிலும் பா.ராமச்சந்திர ஆதித்தனார் படத்திற்கு ஊழியர்களும், பல்வேறு பிரமுகர்களும் மரியாதை செய்தார்கள். நெல்லை மாலை முரசு அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு தமிழர் விடுதலை கொற்றத் தலைவர் அ.வியனரசு தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் தலைமையில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையிலும், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் நிறுவனத் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையிலும் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியிலும் அவரது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு அவரது நினைவு மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவ சிலைக்கு ஊர் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தலைமையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அத்துடன் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தங்கேஷ் ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், குமரேசன் ஆதித்தன், வெங்கடேசன் ஆதித்தன், பத்ம நாப ஆதித்தன், ராதாகிருஷ்ணன் ஆதித்தன், ஜெயேந்திரன் ஆதித்தன், ராஜேந்திரன் ஆதித்தன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page