நியூசிலாந்தில் மீண்டும் வைரஸ் பரவியது எப்படி? – 102 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று உறுதி

Spread the love

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டில் மீண்டும் வைரஸ் பரவியது எப்படி என்பது குறித்து அந்த நாட்டு அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

வெல்லிங்டன்,

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வலுவான சுகாதார கட்டமைப்பு உள்ள நாடுகள் கூட வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

அதே சமயம் தென் கொரியா, வியட்நாம், நியூசிலாந்து, உள்ளிட்ட சில நாடுகள் கொரோனாவின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தது சற்று நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

நியூசிலாந்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய மார்ச் மாத தொடக்கத்திலேயே நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் மூலம் பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான அரசு கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் நியூசிலாந்து மக்கள் 100 நாட்களை கடந்து கொரோனா தொற்று இல்லாமல் வாழ்ந்து வந்தனர். இதற்காக சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு நியூசிலாந்து மக்களுக்கும், பிரதமர் ஜெசிந்தாவுக்கும் வாழ்த்து தெரிவித்து இருந்தது.

100 நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் இல்லாததால் மக்கள் கொரோனா பயத்தில் இருந்து விலகி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வந்தனர்.

இந்தநிலையில் நியூசிலாந்து மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 100 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் திடீரென ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை வைரஸ் தாக்கியது எப்படி என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. நாட்டில் வைரஸ் தொற்று மீண்டும் பரவியது எப்படி என்பதை கண்டறிவதில் பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான அரசு தீவர கவனம் செலுத்தி வருகிறது.

இதுகுறித்து பிரதமர் ஜெசிந்தா கூறியதாவது:-

102 நாட்களுக்குப் பின்னர் நியூசிலாந்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்லாந்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள குடும்பத்துடன் தொடர்பில் இருந்த 200-க்கும் மேற்பட்டோரை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். அதிகப்படியான பரிசோதனை, விரைவான தொடர்பு தடமறிதல் மற்றும் பரிமாற்ற சங்கிலியை நிறுத்துவதற்கான எங்கள் கட்டுப்பாடுகள் ஆக்லாந்தில் இன்று முழு வீச்சில் உள்ளன.

வைரஸ் தொற்று பரவலுக்கான அனைத்து வகையான சாத்தியக்கூறுகள் பற்றி தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். விரைவில் அதற்கான விடையை கண்டுபிடித்து வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்லாந்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஓட்டல்கள், மதுபானக் கூடங்கள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் வைரஸ் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஆக்லாந்து மக்கள் அனைவரும் முக கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள். எனினும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை.

மக்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையைப் பொறுத்து முக கவசம் அணிவது பற்றி முடிவு செய்து கொள்ளலாம். மத்திய அரசின் சார்பில் ஆக்லாந்து நகருக்கு 50 லட்சம் முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page