சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். விழாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

புதுடெல்லி,
இந்திய சுதந்திர தின விழா இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
வழக்கமாக சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா கொண்டாடப்படுகிறது.
விழாவில் கலந்து கொள்ளமாறு வெளிநாட்டு தூதர்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுர்கள் என 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தேசிய மாணவர் படையினர் கலந்து கொள்கிறார்கள்.
கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களில் 1,500 பேர் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. “கொரோனா வைரசை வென்ற வெற்றியாளர்கள்” என்ற அடிப்படையில் குடிமக்களின் உறுதியை வெளிப்படுத்தும் அடையாளமாக இவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்கிறார்கள்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் முக கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கையை சுத்தப்படுத்திக் கொள்ள விழா நடைபெறும் பகுதியில் ஆங்காங்கே கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டு உள்ளது. உடல் வெப்ப பரிசோதனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. 4 இடங்களில் மருத்துவ குழுவினரும் பணியில் இருப்பார்கள்.
சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.