லடாக் எல்லையில் முழுமையான படை விலக்கல் விவகாரத்தில் இந்தியாவுடன் சீனா நேர்மையாக செயல்படும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,
லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் இடையே நடந்த மோதலுக்குப்பின் இரு தரப்பும் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் அங்கு உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து இரு நாடுகளும் படை விலக்கலை மேற்கொண்டன. இதில் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து சீனா படைகளை விலக்கியது.
ஆனால் பங்கோங்சோ, கோக்ரா, தேப்சாங் போன்ற பகுதிகளில் சீனா இதுவரை முழுமையாக படைகளை திரும்பப் பெறவில்லை. இது தொடர்பாக அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்த்தைகளில் இந்தியா தொடர்ந்து அறிவுறுத்தியும், இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
எனினும் லடாக் எல்லையில் முழுமையான படை விலக்கலுக்கு இந்தியாவுடன் சீனா நேர்மையாக செயல்படும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
லடாக் எல்லையில் படைகளை விலக்கும் விவகாரத்தில், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட இருதரப்பு செயல்களின் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்பது இயற்கையானது. நடந்து கொண்டிருக்கும் படை விலக்கல் செயல்முறை விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதை அடைவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட நடவடிக்கைகள் தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டபடி, எல்லைப் பகுதிகளில் முழுமையான படை விலக்கல் மற்றும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை முழுமையாக மீட்டெடுப்பதற்கான நோக்கத்தை நோக்கி சீன தரப்பு இந்தியாவுடன் நேர்மையாக செயல்படும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
இதற்கிடையே சீன ராணுவத்தின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்புக்கான இயக்குனர் மேஜர் ஜெனரல் சி குவோவை சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி நேற்று பீஜிங்கில் சந்தித்து பேசினார். அப்போது கிழக்கு லடாக்கில் எல்லை நிலவரம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை மிஸ்ரி எடுத்துரைத்தார்.
சீன அதிகாரிகளுடன் கடந்த 3 நாட்களில் விக்ரம் மிஸ்ரி மேற்கொண்ட 2-வது சந்திப்பு இதுவாகும். முன்னதாக சீன கம்யூனிஸ்டு கட்சியின் வெளி விவகாரங்களுக்கான மத்தியக்குழு துணை இயக்குனர் லியு ஜியான்சாவோவை கடந்த 12-ந்தேதி அவர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.