திருப்பூரில் தேர்தல் பிரசாரத்தை நாளை மறுதினம் தொடங்குகிறோம் – கே.எஸ்.அழகிரி பேட்டி

Spread the love

தமிழக காங்கிரஸ் கட்சி நாளை மறுதினம் முதல் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


சென்னை,

வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.பி., மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் ஆகியோர் விரைவில் குணம் அடைந்து சமூக பணியிலும், இயக்க பணியிலும் பெரும் தொண்டாற்ற வேண்டும். இதேபோல முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறேன்.

 

ராஜீவ்காந்தியின் பிறந்த தினமான வருகிற 20-ந் தேதியில் (நாளை மறுதினம்) இருந்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க முடிவு செய்திருக்கிறோம். எங்களுடைய முதல் பிரசாரம் திருப்பூர் மாவட்டத்தில் தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் 3 சட்டமன்ற தொகுதிகளை தேர்ந்தெடுத்து, அங்குள்ள வாக்குச்சாவடி கமிட்டிகளை ஆராய்ந்து, தோழமை கட்சிகளுடனும் கலந்து பேசி சரி செய்யவேண்டிய பணியை வருகிற 20-ந் தேதியில் இருந்து தொடங்குகிறோம். அதில் நான் கலந்துகொள்கிறேன்.

ஒரு மாதம் கழித்து அதே தொகுதிக்கு மீண்டும் சென்று ஏற்கனவே நாங்கள் சொல்லி வந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதா? என்பதை செயல் தலைவர்களும், மாவட்ட தலைவர்களும், அந்த மாவட்ட பொறுப்பாளர்களும் ஆய்வு செய்வார்கள். 3-வது மாதம் அந்த தொகுதியில் ஒரு பாதயாத்திரையும், 4-வது மாதம் மாநாடும் நடத்தப்படும். இந்த செயல்திட்டத்தின்படி 234 தொகுதிகளிலும் பணியாற்றுவது என்று முடிவு எடுத்திருக்கிறோம்.

முன்னாள் மாநில தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயல் தலைவர்கள் தலா 2 தொகுதிகளை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்வார்கள். இதுதவிர 150 செயல்வீரர்களை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். இவர் கள் தலா ஒரு தொகுதியை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு தேர்தல் முடியும் வரை அந்த தொகுதியில் மட்டும் பணியாற்றுவார்கள். இதற்கான முன்வடிவை அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பி இருக்கிறோம்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை தமிழக அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. தமிழகத்தில் எதனால் நோய் பரவலை தடுக்க முடியவில்லை என்று வெள்ளை அறிக்கை மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கவேண்டும். மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை தங்கள் பணிகளை சிரமப்பட்டு செய்து வருகிறது. ஆனால் அரசின் போக்கு அதற்கு ஏற்றதாக இல்லை.

இளம்பிள்ளை வாதத்தை ஒழிக்க ரோட்டரி கிளப் அரும்பாடுபட்டது. அதுபோல இப்போதும் தன்னார்வ தொண்டு அமைப்புகள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் இந்த தொற்றை குறைக்க நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். எனவே இந்த பணியில் பொதுமக்கள் தங்களை ஐக்கியப்படுத்தி கொள்ள வேண்டும். மதுரையை 2-வது தலைநகராக மாற்றுவது சிறந்தது. இதன்மூலம் தென் தமிழகம் வளர்ச்சி அடையும். இதற்கு தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.

தொகுதி பங்கீடு குறித்து ராகுல்காந்தியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் முடிவு செய்வார்கள். டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். விநாயகர் சதுர்த்தியை அத்துமீறி கொண்டாடுவோம் என்று கூறுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தாங்கள் கை காட்டுபவர்களுக்கு தான் ஆட்சி என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கூறியது குறித்து கேட்டதற்கு, கே.எஸ்.அழகிரி யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் அமெரிக்க ஜனாதிபதி. இதுபோன்ற கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் என்று கே.எஸ்.அழகிரி பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page