துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து 2 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,
உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்தவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர், தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருவதாகவும், ரவுடிகள் எல்லாம் துப்பாக்கி உரிமம் பெற்றிருப்பதற்கு வருத்தம் தெரிவித்தனர்.
பின்னர், நாட்டு துப்பாக்கிகள், உரிமம் இல்லாத துப்பாக்கிகள் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளையடித்ததாக எத்தனை வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன? சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்றதாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? தமிழகத்தில் எத்தனை பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி கேட்டு தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே நீதிபதிகள் கேட்டிருந்த கேள்விகளுக்கு, தமிழக டி.ஜி.பி. சார்பில் பதில் அளித்து ‘சீல்’ இட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “தமிழகத்தில் அரசாங்கம் பல இலவசங்களை வழங்குகிறது. இதை பெற்றுக்கொண்டு இங்குள்ளவர்கள் வேலைக்கு செல்லாமல் சுகபோக வாழ்க்கையை வாழ்கின்றனர்.
அதனால் விவசாயம் உள்பட எல்லா வேலைகளுக்கும் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகின்றனர். உழைக்க வரும் அவர்களை வரவேற்கிறோம். அதற்காக அங்கிருந்து துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கொண்டு வந்து கொள்ளையடிப்பதை எல்லாம் ஏற்க முடியாது” என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர், தமிழக டி.ஜி.பி.க்கு கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளிக்கவேண்டும். இதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்கின்றோம். அவர், துப்பாக்கி பயன்படுத்தி நாடு முழுவதும் எத்தனை குற்றச்சம்பவங்கள் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ளது? துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன? உள்ளிட்ட கேள்விகளுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.