இங்கிலாந்தை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ரா செனேக்காவின் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனை டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளது.

லண்டன்
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகில் 213க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவது 2 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 76 ஆயிரத்து 862 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 64 லட்சத்து 84 ஆயிரத்து 031 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 62 ஆயிரத்து 037 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை 1 கோடியே 47 லட்சத்து 75 ஆயிரத்து 636 பேர் குணமடைந்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நிறுவனங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. இதில் ஒரு சில நிறுவனங்களின் மருந்துகள், இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் அந்த நாட்டு அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் உருவாக்கி உள்ள மருந்து அதிக நம்பகத்தன்மை அளிப்பதாக கூறப்படுகிறது. அஸ்ட்ரா ஜெனேகா, மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுடன் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு உடன்பாடு செய்துள்ளது.
அதன்படி கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மூன்றாம் கட்ட பரிசோதனை டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியின் விலை ஐரோப்பிய நாடுகளை விட குறைவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்தியாவில் வருகிற டிசம்பருக்குள் தடுப்பூசி தயாராகி விடும் என்றும், அதன் விலை தலா ரூ.1000 ஆக இருக்கும் என்றும் சீரம் நிறுவனம் கூறி உள்ளது.