ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு – ஐகோர்ட்டு தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

Spread the love

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்து வழங்கிய ஐகோர்ட்டு தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


சென்னை,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை ஐகோர்ட்டு நேற்று அனுமதி மறுத்துள்ள நிலையில், இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்:- அ.தி.மு.க. அரசு ஏற்கனவே அறிவித்திருந்தபடி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்” என சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதிக்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான நிலையை தமிழ்நாடு அரசு எடுக்காமல் இருந்திருந்தால் துப்பாக்கி சூடு நடைபெற்று இருக்காது. 13 பேர் காவல்துறையினரால் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கமாட்டார்கள்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்ற தீர்ப்பு ம.தி.மு.க.வின் 26 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இது நீதிக்கு கிடைத்த வெற்றி. மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- தூத்துக்குடியில் நச்சு வாயு கசிவாலும், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களாலும் ஏராளமான அப்பாவிகள் உயிரிழக்க காரணமாக இருந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்திருக்கிறது. மக்களின் உயிரையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடன் அளிக்கப்பட்டுள்ள ஐகோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் அங்கு மிகவும் வலிமையான வாதங்களை முன்வைத்து, அழிவை ஏற்படுத்தும் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதையும், ஆலையின் கட்டமைப்புகள் அகற்றப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். இது அந்தப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றியை நிரந்தரமாக்குகிற வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விஜயகாந்த்

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த்:- எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அது மக்களால் வரவேற்கக்கூடிய வகையிலும், மக்களால் பாராட்டக்கூடிய வகையிலும் இருந்தால் தான் அந்த திட்டம் வெற்றியடைய முடியும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தடை தொடரும் என சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை தே.மு.தி.க. சார்பில் வரவேற்கிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:- ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியில்லை என்று அறிவித்த ஐகோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டு சென்றாலும் தமிழக அரசு அவற்றை எதிர்கொண்டு வெற்றிகொள்ளும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் என்று நம்புகிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:- ஸ்டெர்லைட் மீதான தடை தொடரும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்திருக்கிறது. இந்த தீர்ப்பை பாராட்டி வரவேற்கிறோம். வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தாலும், அங்கேயும் தமிழக அரசின் சார்பில் பொருத்தமான வக்கீல்களை நியமித்து இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள நீதியை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:- பல்லாண்டுகளாக போராடி வந்த தூத்துக்குடி பகுதி மக்களின் நியாயமான உணர்வுகளை ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது. வேதாந்தா நிறுவனம் இத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டிலும் உரிய நியாயத்தை பெற அழுத்தமான வாதங்களை எடுத்துவைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:- சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. இதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை நிலை நிறுத்தப்பட்ட சட்ட நிலையை சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு, வழக்கை எச்சரிக்கையாகவும், வாதங்களை உறுதியாகவும் முன்வைத்து, தூத்துக்குடி மாவட்ட மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்:- மக்களின் வலிமையான குரலுக்கு முன்னால், வல்லரசுகளும் தலைவணங்கித்தான் தீர வேண்டும் என ஐகோர்ட்டு மீண்டும் ஒருமுறை தனது சிறப்புமிகு தீர்ப்பால் அனைவருக்கும் அறிவுறுத்தியிருக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் திரண்ட பொதுமக்களுக்கும், அரசின் அடக்குமுறையில் உயிரிழந்த தன் குடும்பத்து உறுப்பினர்களுக்கும், மரியாதை செலுத்த வேண்டிய நேரமிது. போராட்டக்களத்தில் நிற்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு எனது நன்றிகள்.

இன்று கிடைத்த நீதியை தக்கவைக்க நாம் சோர்வின்றி தொடர்ந்து போராட வேண்டும். மக்களுக்கான நீதி இன்று உறுதியாகி இருக்கின்றது.

கனிமொழி – டி.டி.வி.தினகரன்

தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது. சுற்றுச்சூழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:- ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை நீடிக்கும் என்று சென்னை ஐகோர்ட்டு அளித்திருக்கும் தீர்ப்பு மகிழ்ச்சிக்கும், வரவேற்புக்கும் உரியது. இது தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கும், தியாகத்துக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும்.

சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் நெல்லை ஜீவா உள்ளிட்டோரும் வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page