தேடுதல் வேட்டையின் போது திடீர் தாக்குதல்; குண்டு வீசி போலீஸ்காரர் கொலை

Spread the love

நெல்லை அருகே தேடுதல் வேட்டையின் போது வெடிகுண்டு வீசி போலீஸ்காரர் கொல்லப்பட்டார். குண்டு வெடித்ததில் ரவுடியும் உயிரிழந்தார்.

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மேல மங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் கடந்த 24.11.2018 அன்று வினோத், ராமச்சந்திரன் ஆகிய 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அதே ஊரைச் சேர்ந்த பிச்சையா பாண்டியன் மகன் துரைமுத்துவை (வயது 29) போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

 

ரவுடியான இவர் மீது ஸ்ரீவைகுண்டம், நெல்லை பழைய பேட்டை போலீஸ் நிலையங்களிலும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தலைமறைவான துரைமுத்துவை கைது செய்வதற்காக, ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று துரைமுத்துவை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான, நெல்லை அருகே உள்ள வல்லநாட்டை அடுத்த மணக்கரை மலையடிவார பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவுடி துரைமுத்து தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக, தனிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்று, அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த கட்டிடத்தில் துரைமுத்து தன்னுடைய கூட்டாளிகள் 3 பேருடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

தங்களை போலீசார் சுற்றி வளைத்ததை அறிந்த துரைமுத்து மற்றும் கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

அப்போது துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை தூக்கி திடீரென்று போலீசார் மீது வீசினார். அந்த குண்டு போலீஸ்காரர் சுப்பிரமணியனின் (26) தலையில் விழுந்து வெடித்தது.

இதனால் அவரது தலை சிதறியது. சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, துரைமுத்து மற்றொரு நாட்டு வெடிகுண்டை எடுத்து போலீசார் மீது வீச முயன்றார். அப்போது அந்த வெடிகுண்டு தவறி, துரைமுத்துவின் மீதே விழுந்து வெடித்தது. இதனால் கை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த அவர், கீழே விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே துரைமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே துரைமுத்துவுடன் பதுங்கி இருந்த கூட்டாளிகளான சாமிநாதன், சிவராம லிங்கம் மற்றும் வனத்துறை ஊழியர் சுடலைக்கண்ணு ஆகிய 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

நாட்டு வெடிகுண்டு வீசியதில் பலியான போலீஸ்காரர் சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதான சாமிநாதன் உள்ளிட்ட 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதில் போலீஸ்காரர் தலை சிதறி பலியானதும், ரவுடியும் வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியனின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண்டாரவிளை ஆகும். கடந்த 2017-ம் ஆண்டு இரண்டாம் நிலைகாவலராக பணியில் சேர்ந்த சுப்பிரமணியன், நாகர்கோவிலில் பயிற்சி பெற்றார். பின்னர் தூத்துக்குடி ஆயுதப்படையில் பணியாற்றினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணியன் பணியில் சேர்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மாவட்ட தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டு பணியாற்றி வந்தார்.

இறந்த சுப்பிரமணியனின் பெற்றோர் பெரியசாமி-பிச்சம்மாள். சுப்பிரமணியனுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவருக்கு புவனேசுவரி (25) என்ற மனைவியும், சிவஹரிஷ் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். சுப்பிரமணியன் இறந்ததை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page