சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழில் மொழிபெயர்க்க கோரிய வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,
மத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மீனவர் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, “இந்த அறிக்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தபோது, டெல்லி ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறும்படி உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தெளிவான தகவல் இல்லை என்பதால் வழக்கை தள்ளிவைக்க வேண்டும். ஏற்கனவே கர்நாடக ஐகோர்ட்டு இந்த அறிக்கைக்கு செப்டம்பர் 7-ந்தேதி வரை தடை விதித்துள்ளதால், இந்த வழக்கை தள்ளிவைப்பதால் மனுதாரருக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 8-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.