சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

Spread the love

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளது. வெப்பம் பரவி வருகிறது.

ஊரடங்கால் மக்கள் வேறெங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் உள்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சாவூரில் அதிராம்பட்டினத்தில் கடந்த 5ந்தேதி காலையில் ஒரு மணிநேரம் வரை நல்ல மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அன்று பரவலாக மழை பெய்தது. கடலோர பகுதியான கன்னியாகுமரியில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மித அளவிலான மழை பெய்தது.

இதேபோன்று விருதுநகரில் அருப்புக்கோட்டை மற்றும் நகரை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் ஆகியவற்றால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இதேபோன்று உள்மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழை பெய்து வருகிறது. சென்னையிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், பெரியமேடு, சின்னமலை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதேபோன்று பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, பொன்னேரி, செங்குன்றம், புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து, சென்னை பகுதியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page