அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை தொடங்கியது. முதற்கட்டமாக அமைச்சர் பாண்டியராஜனிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டார்
சென்னை,
தமிழக அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களிடம் சபாநாயகர் ப.தனபால் விசாரணையை தொடங்கினார். முதற்கட்டமாக அமைச்சர் கே.பாண்டியராஜன் உள்பட 3 பேரிடம் அவர் விளக்கம் கேட்டார்.
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பாண்டியராஜன், நட்ராஜ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் பிரிந்தனர்.
இந்தநிலையில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதியன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேரும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
கொறடாவின் உத்தரவுப்படி அரசுக்கு சாதகமாக 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கவில்லை என்றும், எனவே கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சபாநாயகரிடம் பார்த்திபன் உள்ளிட்ட 6 எம்.எல். ஏ.க்கள் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சபாநாயகர் முடிவே இறுதியானது என்றும் அதில் கோர்ட்டு தலையிடாது என்றும் ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
எனவே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், சட்டத்தின் அடிப்படையில் சபாநாயகர் முடிவெடுப்பார் என்ற நம்பிக்கையை தெரிவித்து மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.
இந்தநிலையில் தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில்11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று புகார் அளித்த 6 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அளித்தார்.
தற்போது 11 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் புகார் மனு அளித்தவர்களிடம் விளக்கம் பெறுவதற்கான விசாரணையை சபாநாயகர் ப.தனபால் தொடங்கி உள்ளார். முதற்கட்டமாக அமைச்சர் பாண்டியராஜன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் மற்றும் புகார் அளித்திருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. பார்த்திபன் ஆகியோருக்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
மற்றவர்களுக்கு கேட்காத வகையில், ‘ஆன்லைன்’ மூலம் விளக்கம் அளிப்பதற்கான இணைப்பு 3 பேருக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக, அந்த இணைப்பு சரியாக வேலை செய்கிறதா? என்பதற்கான வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு சபாநாயகர் ப.தனபால் விசாரணையைத் தொடங்கினார். முதலில் பார்த்திபன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தை அலுவலர்கள் மூலம் சபாநாயகர் பதிவு செய்தார். பின்னர் அமைச்சர் பாண்டியராஜன், தனது வக்கீல் அப்துல் சலீம் மூலம் ஆஜரானார். வக்கீல் மூலம் உரிய விளக்கங்களை அமைச்சர் பாண்டியராஜன் அளித்தார்.
அவரைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. நட்ராஜிடம் விளக்கம் கேட்கப்பட்டது. வக்கீல் வைபவ் மூலம் ஆஜராகி தேவையான விளக்கங்களை நட்ராஜ் அளித்தார். இந்த விசாரணை பிற்பகல் 1.30 மணிக்கு நிறைவடைந்தது. அந்த வகையில் ‘ஆன்லைன்’ மூலம் இரண்டரை மணி நேரம் விசாரணை நீடித்தது.
அடுத்தகட்டமாக ஓ.பன்னீர்செல்வம் உள்பட மற்ற எம்.எல்.ஏ.க்கள், புகார்தாரர்களிடமும் தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார். ஆனால் அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.