நடுநிலைப்பள்ளிகளில் வேளாண்மை பாடம் – பிரதமர் மோடி பேச்சு

Spread the love

நடுநிலைப்பள்ளிகளில் வேளாண்மை பாடத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் பண்டல்காண்ட் பிராந்தியம் ஜான்சியில் உள்ள ராணி லட்சுமிபாய் மத்திய வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கல்லூரியையும், நிர்வாக கட்டிடத்தையும் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம்திறந்துவைத்தார்.

 

பின்னர் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயத்தில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே நமது இலக்காக உள்ளது. காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை பதப்படுத்துவது, சமையல் எண்ணெய் இறக்குமதி போன்றவற்றில் உள்ள சவால்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். வறட்சி நிலவும் இந்த பண்டல்காண்ட் பிராந்தியத்தில் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் குறித்து விவசாயிகளுக்கு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வேளாண்மை, விவசாயத்தில் தொழில்நுட்பத்தை புகுத்துதல், வேளாண்மை பொருட்களை சந்தைப்படுத்துதலில் புதிய தொழில்நுட்பம் போன்ற விவரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே நடுநிலைப்பள்ளி வகுப்புகளிலேயே மாண வர்களுக்கு வேளாண்மை பற்றிய பாடத்தை சொல்லிக்கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதற்கு தேவையாய சீர்திருத்தங்கள் புதிய தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்று உள்ளன.

நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதையும், குறைந்த செலவிலான தொழில்நுட்பத்தில் மழை நீரை சேகரிப்பதையும் ஊக்குவிக்க வேண்டும்.

விவசாயம் தொழில் ரீதியாக முன்னேறினால் கிராமங்களில் சுயவேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். விவசாயத்தில் தற்சார்பு என்பது உணவுதானிய உற்பத்தியில் மட்டும் நாம் தன்னிறைவு பெறாமல், கிராமங்கள் முழு அளவில் பொருளாதார சுயசார்புடன் விளங்குவது உறுதி செய்யப்பட வேண்டும். விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்.

ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் பிரச்சினை ஏற்பட்டது. ஆளில்லா குட்டி விமானங்கள் (டிரோன்) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெட்டுக்கிளி தாக்குதல் பிரச்சினையை இந்தியா வெற்றிகரமாக சமாளித்தது. இதனால் பயிர்களுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை. பூச்சிக் கொல்லிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

நிகழ்ச்சியில் மத்திய விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பேசினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page