தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4½ லட்சத்தை தாண்டியது; கோவையில் தொற்று அதிகரிப்பு

Spread the love

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4½ லட்சத்தை தாண்டியது. கோவையில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 81 ஆயிரத்து 588 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,604 ஆண்கள், 2,372 பெண்கள் என மொத்தம் 5,976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 184 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 860 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

 

அதிகபட்சமாக சென்னையில் 992 பேரும், கோவையில் 595 பேரும், கடலூரில் 499 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 21 பேரும், பெரம்பலூரில் 13 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 49 லட்சத்து 62 ஆயிரத்து 357 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 827 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை 4½ லட்சதை தாண்டியுள்ளது. கோவையில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகிறது.

இந்த பட்டியலில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 739 ஆண்களும், 1 லட்சத்து 79 ஆயிரத்து 59 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 20 ஆயிரத்து 506 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 58 ஆயிரத்து 973 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 51 பேரும், தனியார் மருத்துவமனையில் 28 பேரும் என 79 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 12 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், சேலம், விழுப்புரத்தில் தலா 5 பேரும், மதுரை, காஞ்சீபுரம், திண்டுக்கல், கோவையில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, விருதுநகரில் தலா 3 பேரும், திருப்பூர், நெல்லை, திருவாரூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் தலா இருவரும், கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், தூத்துக்குடி, வேலூரில் தலா ஒருவரும் என 27 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 7 ஆயிரத்து 687 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 334 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,040 பேரும், கோவையில் 428 பேரும், செங்கல்பட்டில் 404 பேரும் அடங்குவர். இதுவரையில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 507 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 51 ஆயிரத்து 633 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 921 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 868 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 180 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 431 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 64 அரசு நிறுவனங்களும், 91 தனியார் நிறுவனங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page