விதிமுறைகளின்படியே அரியர் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டது: அமைச்சர்கள் விளக்கம்

Spread the love

பல்கலைக்கழக மானியக்குழு வகுத்துள்ள விதிமுறைகளின்படியே அரியர் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.


சென்னை,

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேரறிஞர் அண்ணா வழியில் தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிக் கொள்கையில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உறுதியாக இருந்தனர். எனவே தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மும்மொழிக் கொள்கையை ஏற்கவே மாட்டோம். எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அந்த உணர்வை யார் வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அது அவரவர் ஜனநாயக உரிமை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தான் எதையும் செய்ய வேண்டும். இந்தியை எந்த நாளும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வகுத்துள்ள விதிமுறைகளின்படியே முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.மேற்கண்ட இரு அமைப்புகள் வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றியே அரசு அறிவிப்பு வெளியிட்டது. தற்போது அரியர் மாணவர்கள் விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகிறது.

இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான கடிதமும் மேற்கண்ட கல்வி அமைப்புகளிலிருந்து கிடைக்கப் பெறவில்லை. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் எப்போது நடைபெறும்? எத்தனை நாள் நடைபெறும்? என்பது சபாநாயகர் முடிவுக்கு உட்பட்டது. அதுகுறித்த அலுவல் கூட்டத்தையும் சபாநாயகர் கூட்டியிருக்கிறார். எனவே உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது உடனிருந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம், ‘மாணவர்கள் அரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியிருக்கிறாரே…’, என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:-

கல்லூரி இறுதி பருவத்தேர்வு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருந்த காரணத்தால், நீதிமன்ற தீர்ப்பின்படி இறுதி பருவத்தேர்வு நடைபெறும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படியே மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு நடைபெறும். பல்கலைக்கழக மானியக்குழு விதித்த விதி முறைகளை பின்பற்றுவதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு வகுத்துள்ள விதி முறைகளை பின்பற்றி தான் மற்ற தேர்வுகளுக்கெல்லாம் தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. மற்றபடி தற்போது அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை. அது தொடர்பாக எந்த கடிதமும் அரசுக்கு வரவில்லை. ஒருவேளை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் வந்திருக்கிறது என்றால், அவர் இதுகுறித்து கவுன்சிலுக்கு என்ன கடிதம் எழுதியுள்ளார் என பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page