இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.8 சதவீதம் சரிவு அடையும்: பிரபல தர மதிப்பீட்டு நிறுவனம் கணிப்பு

Spread the love

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.8 சதவீதம் சரிவு அடையும் என்று பிரபல இந்திய தர நிர்ணய நிறுவனம் கணித்துள்ளது.

 


புதுடெல்லி,

நடப்பு நிதி ஆண்டு, கொரோனா ஆண்டு என்று சொல்லத்தக்க விதத்தில் அமைந்து விட்டது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயைத் தடுப்பதற்காக நீண்ட காலம் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து, வர்த்தகம் என பல துறைகளும் முடங்கின. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொருளாதார, வணிக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு வருகின்றன.

இருந்தாலும் இந்த ஆண்டு இந்தியா பொருளாதார ரீதியில் பெருத்த சவால்களை எதிர்கொள்ளும் நிலைதான் உள்ளது.

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் (2020-21) மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதம் பின்னடைவைத்தான் சந்திக்கும் என்று பிரபல இந்திய தர மதிப்பீட்டு நிறுவனமான ‘இந்தியா ரேட்டிங்க்ஸ் அன்ட் ரிசர்ச்’ கணித்து இருந்தது. இப்போது இந்த நிறுவனம் தனது முந்தைய கணிப்பை மாற்றிக்கொண்டுள்ளது.

அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய கணிப்பை விட மோசமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டி உள்ளது.

ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதம் சரிவை சந்திக்கும் என்று கணித்திருந்த நிறுவனம், தற்போது உற்பத்தி மேலும் குறைந்து 11.8 சதவீத சரிவை சந்திக்கும் என கூறி உள்ளது.

இதையொட்டி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் உள்நாட்டு மொத்த உற்பத்தி நடப்பு நிதி ஆண்டில், 11.8 சதவீதம் எதிர்மறை வளர்ச்சியை (சரிவை) சந்திக்கும். இது இந்திய வரலாற்றின் மிக குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமாக இருக்கும். (இந்தியாவில் 1951-ம் ஆண்டில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி விகித அளவுகள் கிடைக்கின்றன.).

1958, 1966, 1967, 1973, 1980 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து நடப்பு நிதி ஆண்டில் நிகழ்வது 6-வது மோசமான நிகழ்வு ஆகும். முந்தைய குறைவான உற்பத்தி விகிதம் என்பது 1980-ல் ஏற்பட்ட 5.2 சதவீத சரிவு ஆகும்.

அதே நேரத்தில் அடுத்த நிதி ஆண்டில் (2021-22) மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்து, 9.9 சதவீத வளர்ச்சியை எட்டிப்பிடிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமெரிக்க கடன் மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச், நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.5 சதவீதம் சரிவு அடையும் என்று கணித்துள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் சரிவை சந்திக்கும் என்று கணித்திருந்தது. இப்போது முந்தைய கணிப்பை விட இரு மடங்கு சரிவை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சந்திக்கும் என கூறி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு முடக்க நடவடிக்கைகள், இந்திய பொருளாதார நடவடிக்கைகளை முடக்கி போட்டுள்ளதாக கூறுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி மீட்பு என்பது மந்தமானதாகவும், சீரற்றும் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 10.5 சதவீதம் (பின்னடைவு) என கணித்துள்ளோம். முதலில் 5 சதவீதம் சரிவை கணித்திருந்தோம்” என குறிப்பிட்டுள்ளது.

மேலும் 2021-22 நிதி ஆண்டின் முதல் காலாண்டு வரையில் (ஜனவரி-மார்ச் 2022) கொரோனா வைரஸ் தொற்றுக்கு முந்தைய அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி திரும்பும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page