தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the love

பொதுமக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ அமைக்க திட்டமிட்டுள்ளதாக தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் கே.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு ஏறக்குறைய 5 மாத காலத்தில், உயர் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. நாளொன்றுக்கு சுமார் 85 ஆயிரம் வரை பரிசோதனை மேற்கொண்டதன் விளைவாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு முன்பு ஊரடங்கு, இ-பாஸ் முறை இருந்ததால் மக்கள் எங்கே செல்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்தது. தற்பொழுது மக்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருகிற காரணத்தால், இந்நோய் பரவலை கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ்நிலை இருப்பதால் அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றி, கவனமாக இருந்து இந்த நோய் பரவல் மேலும் பரவாமல், படிப்படியாக குறையக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

தற்பொழுது, கொரோனா தொற்று குறித்த சந்தேகம் இருக்கின்ற நிலையில், சாதாரண காய்ச்சல் மற்றும் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெறமுடியாத சூழ்நிலை இருக்கிற காரணத்தால் பொதுமக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த, தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ ஏற்படுத்த அரசால் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதில், மாநகராட்சி, நகராட்சி, பெரிய கிராமங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்கள் அடங்கும். இந்த ‘மினி கிளினிக்’கில் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் ஒரு மருத்துவர், ஒரு நர்சு, ஒரு உதவியாளர் இடம் பெறுவர். காய்ச்சல், தலைவலி போன்ற எளிதாக சிகிச்சை அளிக்கக்கூடிய நோய்களுக்கு அந்த ‘மினி கிளினிக்’கில் மருந்துகள் வழங்கப்படும்.

இப்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால், டெங்கு காய்ச்சல் வராமல் இருப்பதற்கும், அதை தடுப்பதற்கும், ஒழிப்பதற்கும் உள்ளாட்சி துறை கவனமாக இருந்து அதை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “தமிழகத்தில் வன்கொடுமை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். அந்த அடிப்படையில் பல்வேறு அறிவுறுத்தல்கள் காவல் துறைக்கு வழங்கப்பட்டதன் காரணமாக, மற்ற மாநிலங்களை காட்டிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 774 என்று குறைவாகத்தான் இருக்கிறது. வன்கொடுமை என்ற நிலையே தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பதுதான் அரசின் எண்ணம். அதற்காக அரசால் பல்வேறு வகைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page